புதன், 25 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு சதி கும்பலுக்கு ரூ.2 கோடி கூலி



திண்டுக்கல் : பசுபதி பாண்டியனை கொலை செய்ய கும்பலுக்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 10ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த அருளானந்தம், ஆறுமுகச்சாமி ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், சுபாஷ் பண்ணையாரின் தூண்டுதலின்பேரில் பசுபதி பாண்டி யனை கொலை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, சுபாஷ் பண்ணையாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொலைக்கு மூளையாக இருந்து சதி செய்த நந்தவனம்பட்டியை சேர்ந்த சீலப்பாடி ஊராட்சி உறுப்பினர் நிர்மலா, திண்டுக்கல் யூனியன் கவுன்சிலர் முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்து திண்டுக்கல் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் லதா வீட்டில்  நேற்று ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் பிப்ரவரி 7ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலா திருச்சி மத்திய சிறையிலும், முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில், இக்கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நிர்மலா, சதி திட்டத்தில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த ஓராண்டாகவே பசுபதி பாண்டியனை கொலை செய்ய நிர்மலா, முத்துப்பாண்டியன் ஆகியோருடன் சுபாஷ் பண்ணையார் திட்டம் தீட்டியுள்ளார். இதில் நிர்மலா, முத்துப்பாண்டிக்கு தலா ஸீ1 கோடி தரப்பட்டுள்ளது. இந்த பணத்தில்தான் நிர்மலா, 3 ஷேர் ஆட்டோ, 3 பிளாட், 2 சொகுசு கார் வாங்கியுள்ளார்.

தீக்குளிப்பு நாடகம்: பசுபதி பாண்டியன் கொலையான அன்று இரவு போலீசார் அவரது உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற நிர்மலா, “ஐயாவே போயிட்டார், இனி எங்களை காப்பாத்த யார் இருக்கா?‘ என கதறி அழுதார். தீக்குளிக்கப் போவதாக கூறி கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றுவது போல நாடகமாடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மண்ணெண்ணெய் கேனை பறித்துள்ளனர். தன் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்டமாக நிர்மலா நாடகமாடியது போலீஸ் விசாரணை யில் தெரியவந்துள்ளது.

முத்துப்பாண்டி சிக்கியது எப்படி?: கடந்த ஆண்டு நிலப்பிரச்னையில் முத்துபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது, எதிர்தரப்பினருக்கு ஆதரவாக பசுபதி பாண்டியன் பஞ்சாயத்து பேசியுள்ளார். அந்த நேரத்தில் முத்துபாண்டியனை தூக்கிச் சென்று பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் அவர் மீது கோபத்தில் இருந்த முத்துபாண்டியை, சுபாஷ்பண்ணையார் தரப்பினர் சந்தித்துள்ளனர். அதன்பிறகு தான் நிர்மலாவை, சுபாஷ் பண்ணையார் தரப்பினருக்கு கவுன்சிலர் முத்துபாண்டி அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம் பசுபதி பாண்டியனை கொலை செய்து முத்துபாண்டி பழி தீர்த்து கொண்டார்.

வாடகை காரில் வேவு

கடந்த 11ம் தேதி பசுபதி பாண்டியன் உடல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அன்று திண்டுக்கலில் நடந்த இறுதி ஊர்வலத்தில் முத்துப்பாண்டி பங்கேற்றுள்ளார். மேலும், தனது காரை பயன்படுத்தாமல், வாடகைக்கு கார் பிடித்து ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு தூத்துக்குடி சென்றார். அங்கு என்ன நடக்கிறது? என்பதை முத்துப்பாண்டி வேவு பார்த்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக