வெள்ளி, 27 ஜனவரி, 2012

ரெண்டு ஏக்கர் நிலம்... பத்து லட்சம் பணம்!


சுபதி பாண்டியன் கொ​லைச் சதியின் மர்ம முடிச்சுகள் மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ஆனாலும், சில சந்தேக ரேகைகள் இன்னும் விலகவில்லை! 
கடந்த ஜனவரி 10-ம் தேதி, திண்டுக்கல் - நந்தவனப்பட்டியில் அவரது வீட்டுக்கு அருகிலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார் பசுபதி பாண்டியன். அடுத்த இரண்டாவது நாள், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில், இடையர்தவணைக் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆகியோர் சரண் அடைந்தனர்.
இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த திண்டுக்கல் போலீஸார், அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய திண்டுக்கல் எஸ்.பி ஜெயச்சந்திரன், 'சரண்டர் ஆன இரண்டு பேரிடமும் விசாரித்ததில், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார்தான், பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய இவர்களை அனுப்பினார் என்பது தெரிய வந்தது. அவரும் கொலையாளிகளும் ஒருவருக்கொருவர் செல்​போனில் பேசியதற்கான ஆதாரங்​களும் கிடைத்து உள்ளன. கொலை செய்தவர்கள், 'எப்படிக் கொலை பண்ணினோம்' என நடித்தும் காட்டினார்கள்.
அதனால், சுபாஷ் பண்ணையாரை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்து இருக்கிறோம்.அருளானந்தம், ஆறுமுகசாமி இருவருடன் சண்முகசுந்தரம் என்பவரும் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டு இருக்கிறார். அதுபோக, நிர்மலா என்பவர் இவர்களுக்கு நந்தவனப்பட்டியில் வீடு பார்த்துக் கொடுத்திருக்கிறார். இதுபோன்று மறைமுகமாக சம்பந்தப்பட்டு இருந்த ஒன்பது பேரையும் சேர்த்து 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். மீதி 12 பேரையும் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து இருக்கிறோம்' என்றார்.  
தனிப்படையில் உள்ள அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, 'சரண் அடைஞ்ச ஆறுமுக​சாமியும் அருளானந்தனும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே திண்டுக்கல் வந்துட்டாங்க. வேற வேற இடத்துல இருந்தவங்க, 15 நாளுக்கு முன்னாடிதான் நந்தவனப்பட்டி ஏரியாவுக்குக் குடி போயிருக்காங்க. அவங்களோட விருதுநகர் மாவட்டம் முகவூர் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரமும் சேர்ந்துக்கிட்டார். அவங்களுக்கு உதவி செய்த நிர்மலா, பசுபதிபாண்டியனோட சமூகத்தைச் சேந்தவங்க. அதனால யாருக்கும் சந்தேகம் வரலை. இவனுங்க சைக்கிளிலேயே எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்துட்டு இருந்திருக்காங்க. நோட்டம் பாக்க வந்தப்போ, அன்னிக்கு கரன்ட் கட்டாகி சரியா வாய்ப்பு அமைஞ்சதால், இவங்களே கொலையைப் பண்ணிட்டாங்க' என்றனர்.
கொலையாளிகள் திடீரென சரண் அடைந்தது பலரது புருவத்தை உயர வைத்துள்ளது. 'சரணடைந்த இருவரும் கொலைக்கு சம்பந்தப்பட்டவர்களே கிடையாது' என்றும் அதிரடி கிளப்புகிறார்கள் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்கள். 'அருளானந்தம் மேல் ஏற்கெனவே கொலை வழக்கு, திருட்டு வழக்கு எல்லாம் இருக்கு. 2008-ம் வருஷம் குண்டர் சட்டத்துலயும் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். வேற ஒரு வழக்கில் சிக்கி ஜெயிலில் இருந்த அருளானந்தம், பசுபதி பாண்டியன் கொல்லப்படுறதுக்கு நாலைஞ்சு நாளைக்கு முன்புதான் ஜாமீனில் வந்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே அவங்க எப்படி வேவு பாக்க முடியும்? கொலை நடந்த இடத்துக்குப் பக்கத்தில் ராத்திரி முழுக்க இந்த மூவரும்  இருந்ததா போலீஸ் சொல்கிறது. கள்ளிப்பட்டி வரைக்கும் ஓடி மோப்பம் பிடித்த போலீஸ் நாய், ஏன் இவங்களைக் கண்டுபிடிக்கலை?
வெங்கடேசப் பண்ணையார் குடும்பத்துக்கும் பசுபதி பாண்டியனுக்கும் பகை இருந்தது எல்லோருக்கும்
தெரிஞ்ச விஷயம். அதனால், வெங்கடேசப் பண்ணையாரோட தம்பி சுபாஷ் பண்ணையார்தான் பண்ணிருப்பார்னு எல்லாரும் சொன்னாங்க. பல தடவை பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய முயற்சி செஞ்சு, எல்லாமே தோல்வி அடைஞ்சதால கொலை முயற்சியையே சிலர் கைவிட்டுட்டாங்க. 'பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய வேற எதிரிகள் யாராவது முன்வந்தா, அவங்களுக்கு உதவி பண்ணலாம்'னு சிலர் அறிவித்ததும் உண்டு. இந்த நேரத்தில்தான் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டு இருக்கார்.  பண்ணையார் ஏற்பாட்டில்தான் இந்த இரண்டு பேரும் சரண் அடைஞ்சு இருக்கிறதா சொல்றாங்க.  இவர்களுக்கு ஆலங்குளம் பகுதியில் ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலமும் தலா பத்து லட்சம் பணமும் கொடுத்து, கொலையை செய்ததா ஒப்புக்கச் சொல்லி இருக்காங்க. சரண்டர் ஆனவங்க சொன்னதன் அடிப்படையில், போலீஸும் வழக்கை முடிச்சுட்டாங்க. ஆனா, உண்மையான குற்றவாளிகள், அதுக்காகக் கைமாறின கோடிக்கணக்கான பணம் பத்தின விவரங்களை மறைக்கிறார்கள்'' என்கிறார்கள்.
சுபாஷ் பண்ணையார் தலைமறைவாக இருப்பதால், அவரிடம் பேச முடியவில்லை. அவருக்கு நெருக்கமான சிலரும் இந்த வழக்கு குறித்து பேச மறுத்துவிட்டார்கள். இந்தக் கொலை வழக்கில், பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சொல்லும் கருத்துக்களையும் போலீஸார் அலட்சியப்படுத்தக் கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக