புதன், 11 ஜனவரி, 2012

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் வெட்டிக்கொலை


திண்டுக்கல் : தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன்(52), திண்டுக்கல் அருகே அவரது வீட்டின் முன்பு நேற்றிரவு மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பசுபதிபாண்டியனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் அலங்கார்தட்டு கிராமம். 12 ஆண்டுக்கு முன்பு, திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி இபி காலனிக்கு குடிபெயர்ந்தார்.

நேற்று இரவு 8.30 மணியளவில், நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பு, மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு கிடந்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை, அருகே இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பசுபதி பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.

பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவம், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டவுன் டிஎஸ்பி சுருளிராசு தலைமையில் ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை முன்பும், முக்கிய இடங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.  கொலைக்கான காரணம், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து உடனடியாகத்  தெரியவில்லை. திண்டுக்கல் எஸ்.பி.ஜெயச்சந்திரன் கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தினார்.கொலையாளிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்டு கொலை... பசுபதி பாண்டியனுடன் எப்போதும், கட்சி நிர்வாகிகள் 15 பேர் இருப்பது வழக்கம். நேற்றிரவு அவர்கள் அனைவரும் சாப்பிட சென்று விட்டனர். குழந்தைகள் வீட்டிற்கு உள்ளே இருந்தனர். இத்தருணத்தை நோட்டமிட்ட மர்மநபர்கள் திடீரென வீட்டிற்கு வந்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு சென்றுள்ளனர். பசுபதி பாண்டியனுக்கு 15 வயதில் பிரியா என்ற மகளும், 13 வயதில் சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசை கண்டித்து, நேற்று முன்தினம் தேனியில், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் இவர் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்து விட்டு, அன்றிரவே வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பலமுறை உயிர் தப்பியவர்

பசுபதிபாண்டியனை கொலை செய்ய பல முறை முயற்சி நடந்துள்ளது. அனைத்திலும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். 2006ம் ஆண்டு மனைவி ஜெசிந்தா பாண்டியனுடன் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே காரில் சென்றபோது, மர்ம நபர்கள் லாரியால் மோதி, சரமாரியாக காரை நோக்கி வெடிகுண்டு வீசினர். இதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். ஆனால் இச்சம்பவத் தில் பசுபதி பாண்டியன் மயிரிழையில் உயிர்தப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக