வெள்ளி, 13 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் வெட்டிக்கொலை: திண்டுக்கல் மாவட்டத்தில் பதற்றம்



தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் மர்ம  கும்பலால் நேற்றிரவு (ஜன.10) வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டுக்கு அருகே இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். திண்டுக்கல் நகரில் போலீசார் இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன் (வயது 55). இவரது வீடு திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள நந்தவனம்பட்டியில் உள்ளது. அவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. பசுபதிபாண்டியன் நேற்று இரவு தனது வீட்டில் இருந்தார்.  அவருடைய ஆதரவாளர் ஒருவரும் உடன் இருந்தார். தனது ஆதரவாளரிடம் சிகரெட் வாங்கி வரும்படி கூறினார். உடனே ஆதரவாளர் சென்று விட்டார்.

அந்த இடத்தில் பசுபதிபாண்டியன் மட்டும் தனியாக அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அவரை சூழ்ந்து கொண்டது. செல்போனில் பேசிக் கொண்டு இருந்த பசுபதிபாண்டியன் சுதாரித்துக் கொள்வதற்குள், அந்த கும்பல் தாக்குதல் நடத்தினர்.

அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றால் அந்த கும்பல் பசுபதிபாண்டியனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் அவரது உடலில் வயிறு, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயமும், கத்திக்குத்து காயமும் ஏற்பட்டது. இதில் சுருண்டு விழுந்த பசுபதிபாண்டியன் சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார். அவர் இறந்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதற்கிடையே பசுபதி பாண்டியனின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த அவருடைய ஆதரவாளர்கள் மைதானத்திற்கு ஓடி வந்து பார்த்தனர். அங்கு பசுபதிபாண்டியன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை சூப்பிரண்டு நடராஜமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டனர்.

போலீஸ் மோப்பநாய் ரூக்கி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று படுத்துக் கொண்டது. கொலையாளிகள் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பழிக்குப்பழியாக அவரை தீர்த்துக் கட்டினார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கொலை சம்பவத்தையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். திண்டுக்கல் நகரில் போலீசார் இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பசுபதிபாண்டியனின் உடல் வைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன..

பசுபதி பாண்டியன் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அவருடைய மனைவி வக்கீல் ஜெசிந்தாபாண்டியன். திண்டுக்கல்லை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக