புதன், 11 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை கொலையாளிகளை பிடிக்க நெல்லை, தூத்துக்குடிக்கு தனிப்படைகள் விரைவு


திண்டுக்கல் : தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டு கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி பாண்டியன்(52). தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவராக இருந்தார். இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனால் இவரை கொலை செய்ய எதிரிகள் பலமுறை முயற்சிகள் மேற்கொண்டனர். ஒரு முறை இவரை குறிவைத்து குண்டு வீசப்பட்டபோது உயிர் தப்பினார். இதில் அவரது மனைவி ஜெசிந்தா கொல்லப்பட்டார்.

இதற்கிடையே, பசுபதிபாண்டியன் 12 ஆண்டுக்கு முன் திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி இபி காலனிக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது தாய் மற்றும் மகள், மகனுடன் வசித்து வந்தார். தனக்கு நெருக்கமான 10க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புக்காக எப்போதும் உடன் வைத்திருந்தார். இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன் இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அனைவரும் சாப்பிடச் சென்றனர்.

தனியாக இருந்த பசுபதி பாண்டியனை திடீரென வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. தகவலறிந்த திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இக்கொலையால் தென்மாவட்டங்களில் பெரும் பதற்றம் நிலவியதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசியதால் இந்த 2 மாவட்டங்களிலும் உடனடியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் தெய்வம், அசோகன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் 2 தனிப்படையினர், தூத்துக்குடி, நெல்லைக்கு விரைந்துள்ளன. 3வது தனிப்படை திண்டுக்கல்லில் கொலையாளிகளை தேடி வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பசுபதி பாண்டியன் உடல், நேற்று காலை 8 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தாய் வேலம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை முன் எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மருத்துவமனை முன் ஏராளமானோர் திரண்டிருந்ததால் பின்புறம் வழியாக அவரது உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது.

தகவலறிந்த பலர் மருத்துவமனையின் பின்புறம் ஓடிச்சென்று ஆம்புலன்சை முற்றுகையிட்டனர். பின்னர் தாங்கள் ஊர்வலமாக உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி உடலை ஒப்படைக்க கோரினர். ஆனால் எஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் உடல் மெயின் வீதி வழியாக, சிறிது தூரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பிற்பகல் 12.30 மணிக்கு மேல் அவரது உடல் திண்டுக்கல் நகர எல்லையை கடந்து மதுரை பைபாஸ் சாலையை சென்றடைந்தது. உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்சின் முன்னும், பின்னும் 8 வாகனங்களில் அதிரடிப்படை மற்றும் போலீசார் உடன் சென்றனர். உடல் எடுத்து செல்லப்பட்டதால்  திண்டுக்கல், திருப்பூர், கோவை, கொடைக்கானல், கம்பம், தேனி வழித்தடங்களில் மதுரையில் இருந்து நேற்று மதியம் 12 மணி வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. திண்டுக்கல்லில் பஸ்கள் இயங்காததால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. பஸ் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

டிரைவர் மீது தாக்கு:

திண்டுக்கல் மாவட்டம் முருகன்பட்டி பகுதியில் திண்டுக¢கல்& மதுரை 4 வழிச்சாலையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலக்கோட்டை அருகே பூசாரிபட்டி பிரிவு வத்தலக்குண்டு நோக்கி சென்ற அரசு பஸ் மீது 20 பேர் கும்பல் கல்வீசி தாக்கியது. பஸ்சில் ஏறி கண்டக்டரின் கைப்பையை பறித்து சென்றது. அதில் ரூ.11,000 இருந்தது.

இந்த சம்பவத்தில் டிரைவர் சோலைராஜ் காயமடைந்தார். அப்போது ரோந்து சென்ற டிஎஸ்பி புஷ்பம் தலைமையிலான போலீசார் அக்கும்பலை விரட்டிச் சென்றனர். இதில் பூசாரிபட்டியை சேர்ந்த முருகன்(45), கணேசன்(45) ஆகியோர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், 18 பேரை தேடி வருகின்றனர்.

செல்போன் துப்பு: பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவரது வீட்டின் அருகே இருந்து மர்மநபர் ஒருவர் செல்போனில் பேசியுள்ளார். போலீசார் செய்து அந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்தனர். அந்த எண்ணுக்குரியவர், பசுபதி பாண்டியனுக்கு, நன்கு பழக்கமானவர், எப்போதும் பாதுகாப்பாக இருப்பவர் என தெரியவந்துள்ளது. அந்த எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, பசுபதிபாண்டியனுடன் வழக்கமாக பாதுகாப்பாக இருக்கும் 20 பேரை, திண்டுக்கல் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். காவல்நிலையத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டிக் கொண்டு விடிய, விடிய விசாரணை நடந்தது. இதில், அந்த செல் எண்ணுக்குரியவர் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைகளில் ஒன்று, நேற்று மாலை திருப்பூருக்கு விரைந்துள்ளது.

மகள், மகன் கதறல்

2006ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே காரில் மனைவியுடன் சென்ற பசுபதி பாண்டியனை லாரியை மோதி வெடிகுண்டு வீசி கொலை செய்ய ஒரு தரப்பினர் முயன்றனர். அதில் பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார். ஆனால், அவரது மனைவி ஜெசிந்தா கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் பசுபதி பாண்டியனும் கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை பார்த்து அவரது மகள் பிரியங்கா, மகன் இருவரும், ‘நாங்கள் அனாதையாகி விட்டோம்‘ எனக்கூறி கதறி அழுதனர்.

 எஸ்பி பரபரப்பு தகவல் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

திண்டுக்கல் : பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரென்பது ஓரளவு தெரியவந்துள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றன என்று திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் தெரிவித்தார். பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளில் ஒருவர் சைக்கிளில் வந்ததாகவும் மற்ற 2 பேர் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை நடப்பதற்கு முன் மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் நீண்ட நேரம் நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பசுபதி பாண்டியன் வீட்டின் அருகே அனாதையாக கிடந்த புதிய சைக்கிளை போலீசார் கைப்பற்றினர். அந்த சைக்கிளில் உமா சைக்கிள் மார்ட், பெரியார் சிலை அருகில், திண்டுக்கல் என்ற முகவரி இருந்தது. இதனால், பசுபதிபாண்டியனை கொலை செய்ய வந்தவர்கள் திண்டுக்கல்லில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துள்ளனர். எனவே கொலையில் ஈடுபட்டது உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து சைக்கிள் கடை உரிமையாளரிடம் பெறப்பட்ட அங்க அடையாளங்களை வைத்து குற்றவாளிகளின் படத்தை வரையும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொலை நடப்பதற்கு முன் அப்பகுதியில் செல்போனில் பேசிய நபர்களை கண்டுபிடிக்க செல்போன் டவரில் குறிப்பட்ட நேரத்தில் பதிவாகியுள்ள எண்களைக் கொண்டு கொலையாளிகளை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் எஸ்பி ஜெயச்சந்திரன் கூறுகையில், ‘பசுபதி பாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 3 தனிப்படையினரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். குற்றவாளிகள் யாரென்பது ஓரளவு தெரியவந்துள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றன. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்‘ என்றார்.

ஜான்பாண்டியன் இரங்கல்:

பசுபதிபாண்டியன் படுகொலை செய்யப்பட்டது அறிந்து துயரம் அடைந்தேன். இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபடும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாததை வெளிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யவேண்டும். பசுபதிபாண்டியன் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக