புதன், 25 ஜனவரி, 2012

வெடித்த துப்பாக்கிகள்... தொலைந்த உயிர்கள்

 

 
 
 
தமிழகத்தையே குலுக்கி போட்டுவிட்டது அந்தச் சம்பவம். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தலித் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி தென்மாவட்ட மக்களிடையே ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டது. ஆறு பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந் திருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தலித் தலைவரான இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்நாளை கடந்த சில ஆண்டுகளாக வீரவணக்க நாளாக குருபூஜை செய்து வழிபட்டுவருகின்றனர் தலித் மக்கள். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திவருகின்றனர். 54வது நினைவு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி அமைதியுடன்தான் தொடங்கியது. ஆனால் காலை 11.30 மணிக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் அஞ்சலி செலுத்த வருவதற்கு தடைவிதித்து போலீசார் அவரை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்ததாக வந்த தகவல் 6 உயிர்களை பலிவாங்கிய பிறகே ஓய்ந்தது.

இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் ராமநாதபுரம் அருகே பச்சேரியில் பிளஸ் 1 படிக்கும் தலித் மாணவர் பழனிக்குமார் கொலை செய்யப்பட்டதால் மாவட்டத்தில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வந்தது. 144 தடை உத்தரவும் போடப் பட்டது. இதனால் ஜான் பாண்டியன் வந்தால் சட்டம் ஒழுங்குச் சீர்குலையும் என போலீசார் கருதியதாகக் கூறப்படுகிறது. முதலில் சாலை மறியல் செய்த தமமுக தொண்டர்களை போலீசார் கலைந்துபோகச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது பலனளிக்காமல் போக போலீசார் தடியடி நடத்த கலவரம் துப்பாக்கிச் சூடு வரை சென்றது. இதில் டி.ஐ.ஜி., எஸ்.பி. உட்பட ஏராளமான போலீசாரும், தலித் மக்களில் பலரும் பலத்த காயமடைந்தனர். இந்தக் கலவரம் இதோடு நின்றுவிடவில்லை. அஞ்சலி செலுத்த மதுரையிலிருந்து வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்த அங்கும் பதற்றமான சூழல் உருவாகி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலரும் காயமடைந்தனர். பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாகின. தென்மாவட்டங்களில் பல ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதுகுறித்து தசஇயிடம் பேசிய தியாகி இமானுவேல் பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் சந்திரபோஸ், “கடந்த 1988 இல் இருந்து நான் இந்த நிகழ்வை நடத்துகிறேன். சாதிரீதியான ஒடுக்குமுறையில் படுகொலை செய்யப்பட்ட இமானுவேல் சேகரன் தேவேந்திர குல சமூகத்தின் அடையாளம். அந்த அடையாளம் மறையக்கூடாது என்பதற்காகத் தான் அவரது நினைவு நாளில் இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. முதலில் நான் மட்டுமே செய்து வந்தேன். பிறகு மற்ற பகுதி தாழ்த்தப்பட்ட மக்களும் இங்கு வந்து அனுசரிக்க ஆரம்பித்தனர். அதுவே இன்று பல லட்சம் மக்கள் வருகிற நிகழ்வாக மாறியிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர் சுப.தங்கவேலன், தொகுதி எம்.பி. ரித்திஷ் உட்பட பலரும், அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் வந்து மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

செப்.11ம் தேதி காலையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மரியாதை செலுத்தி விட்டுச் சென்றுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்போம் என்று சொல்லித்தான் வாக்கு சேகரித்தனர். ஆனால் தமிழக அரசு நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க எந்த விதியும் இல்லை  என்று  சொல்லி விட்டது. எங்கே முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு இணையாக இவர்கள் வளர்ந்து விடுவார்களோ எனப் பயந்து சிலர் அரசியல் அதிகாரம் மூலம் இந்தக் கலவரத்தை ஏற்படுத்திவிட்டனர். ஜான் பாண்டியனை ஏன் போலீஸ் கைது செய்கிறது? அவர் விழாவிற்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என உளவுத்துறை மூலம் அறிக்கை வந்ததாகவும் அதனால் அவர் வருகையை தடுத்த தாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இப்போது 6 உயிர்கள் பலியானது மட்டும் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு இல்லையா? இந்தக் கலவரத்தை காவல்துறையினரே திட்டமிட்டுச் செய்துள்ளனர். காவல் துறையின் வாகனங்கள் அனைத்தும் அவர்கள் பக்கம் இருக்கும்போது எப்படி அதை கொளுத்தியிருக்க முடியும்?
இந்தக் கலவரம் ஒரு தரப்பிற்கும் அரசுக்கும் இடையே நடந்த வன்முறை. இந்த குருபூஜை மூலம் மக்கள் சக்தியைத் திரட்டிக் காண்பித்தால் அரசு விழா எடுக்கவேண்டிய நிலை வரும். எனவே இதனை ஒடுக்க அதி காரத்தில் உள்ள சிலரே கலவரத்தை ஏற்படுத்தி அடுத்த ஆண்டு இந்த நிகழ்விற்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பதே திட்டம். அதனை காவல்துறையினர் கனகச்சிதமாகச் செய்துவிட்டனர்” என குற்றஞ்சாட்டினார். மத்திய அரசு இமானுவேல் சேகரனாருக்கு கடந்தாண்டு தபால் தலை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடவேண்டிய தகவல்.

தொடர்ந்து இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அன்று காலை நடந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார். “நான் 11 ஆம் தேதி காலை தூத்துக் குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு திருநெல்வேலியில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுகொண்டிருந் தேன். அங்கிருந்து பரமக்குடி செல்வதாக திட்டம். என்னுடன் இரு மாவட்ட தொண்டர்களும் வருவதாக இருந்தனர். அங்கு மாலை 3 மணியி¢ல் இருந்து 5 மணி வரை  அஞ்சலி செலுத்த காவல்துறையினர் எனக்கு நேரம் ஒதுக்கியிருந்தனர். ஆனால் இதற்கிடையே திருநெல்வேலி செல்லும் வழியிலேயே பிளஸ் 1 மாணவன் இறந்த சம்பவத்திற்காக 144 தடை உத்தரவு அங்கே போடப் பட்டுள்ளது. அதனால் நீங்கள் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏற்கெனவே அந்தப் பையன் இறந்த இரு தினங்களுக்கு முன்பே நீங்கள் வரவேண்டாம்; சட்டம் ஒழுங்குச் சீர்குலையும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டதால் சரி என்று கேட்டு நான் அங்கு செல்ல வில்லை. எனது கட்சிக்காரர்களை வைத்தே அந்தப் பள்ளி மாணவனின்  அடக்கத் தைச் செய்துவிட்டேன். அதனால் இதற்கும் நான் இமானுவேல்சேகரன் நினைவு தினத்தில் கலந்துகொள்வதற் கும் சம்பந்தமே இல்லை. இது பரமக்குடியில் நடக்கிறது. அது கமுதி அருகே மண்டபமாணிக்க பச்சேரி என்ற கிராமம்.

எனவே காவல்துறையினர் திட்டமிட்டே என்னை கைது செய்தனர். அதோடு முதல்வருக்கும் தவறான தகவலை அளித்து சட்டமன்றத்தில் அந்தப் பையனை காரணம் காட்டி சட்டம் ஒழுங்குச் சீர்குலையும் என்பதால் தான் இந்த நடவடிக்கை என்றும் தெரிவிக்கச் செய்துள்ளனர். என்னை வீட்டுக் காவலில் வைத்திருந்தால்கூட இந்தப் பிரச்னை எழுந்திருக்காது. வல்லநாடு துப்பாக்கிச் சூடு பயிற்சி இடத்தில் வைத்ததால் என்னைச் சுட்டுவிட்டனர் என்ற தகவலும் பரவியிருக்கிறது” என்றவர், “தவறு செய்த அதிகாரிகளை அரசு உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’’ என்றார். 
இந்த செப்டம்பர் 11 அன்று  அமெரிக்கத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நிகழ்வு. இந்த தினம் தமிழகத் தில் வெடித்த கலவரத்தின் மூலமாக தென்மாவட்டத்தில் மிகவும் மறக்க முடியாத தினமாக மாறிவிட்டது.  இது தொடர்கதை ஆகாமல் சம்பந்தப்பட்ட வர்கள் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.




மிக மோசமான மனித உரிமை மீறல் இது

ஹென்றி டிபேன்,
மக்கள் கண்காணிப்பகம்


பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் மிக மோசமான மனித உரிமை மீறலாகும். மக்களின் மீது ஆயுதப் பிரயோகத்தைச் செய் வதற்கு போலீசார் பின்பற்ற வேண்டிய எந்தச் சட்ட நடைமுறை களும் இந்த தாக்குதலில் பின்பற்றப் படவில்லை. வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமைச் செயலாளி கள் அடங்கிய எங்கள் குழுவினர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணீரை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு நடவடிக்கையில் சென்னையிலிருந்து பலரின் பங்கு இருந்ததாக எங்கள் உண்மை அறியும் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அரசுப் பணியிலும் வெளியிலும் இருப்பவர்கள். மூத்த காவல்துறை அதிகாரிகளும் வேறு சில அதிகாரிகளும் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று பேசும்போது குறிப்பிட்டுள்ளனர்.

செப்டம்பர் 9ம் தேதி கொல்லப் பட்ட தலித் இளைஞன் கொலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா சில காரணங்களைக் கூறியுள்ளார். பச்சேரி கிராமத்திற்கு அருகில் முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள சுவரில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து எழுதியதால் அந்த தலித் இளைஞன் கொல்லப் பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த கிராமத்தின் தெருக்களில் தலித்துகள் இன்னும் செருப்பு போட்டுக்கூட நடக்கமுடியாது என்பதே உண்மையான நிலை. ஆனால், உளவுப் பிரிவினர் கொடுத்திருக்கும் தவறான தகவல்கள்தான் முதலமைச்சரின் அறிக்கையில் பிரதிபலிக்கிறது.
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு நபர்களுக்கும் உடனடியாக தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கவேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதா, ஆறு தலித் உயிர்களின் இழப்புக்காக தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு தலித் சமூகத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும். இது இந்தச் சம்பவத்தின் மூலம் இரு சமூகத்தினருக்கிடையே தொடரப்போகும் பதற்றங்களைக் குறைத்து மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு வழிவகுக்கும். அரசுக்கு வெளியே உள்ள நபர்கள் தலையீடு காவல்துறையில் இனி இருக்காது என்றும் முதலமைச்சர், தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கவேண்டும்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரால் அமைக்கப்படும் நீதி விசாரணை எதுவானாலும் அது ஏற்கெனவே போலீசாரிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே நடக்கும். அவை ஏற்கெனவே திருத்தி மாற்றப்பட்டுள்ளன. இதற்கு முன்பு தாமிரபரணி நதி அருகில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டையும்  நீதிபதி மோகன் விசாரணை ஆணையத்தையும் மறந்து விடக்கூடாது.  தெற்குப் பிராந்திய ஐ.ஜி.க்கு சென்னையிலிருந்து இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்த உத்தரவு அளித்தது யார் என்பதையும் ஏன் மாவட்ட ஆட்சியரையும் மீறி இந்த விஷயம் நடைபெற்றது என்பதையும் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இந்த விசாரணை சரியாக நடத்த தேசிய மனித உரிமை கமிஷன்தான் தகுந்த அமைப்பாகும். அதனால் தமிழ்நாடு அரசு இந்த விசாரணை யை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியிடம் தராமல் தானாக முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இந்த வழக்கை ஒப்படைக்கவேண்டும்.

பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை உடனடியாக தொடங்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக