ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி-ஜான் பாண்டியன்


John Pandian
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு அழைத்தால் தான் தயாராக உள்ளதாக ஜான் பாண்டியன் கூறினார்.

இது குறித்து, சங்கரன்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அதிமுகவை எதிர்ப்பதற்கு பொது வேட்பாளரை நிறுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இதற்காக எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அழைத்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதே போல், புதிய தமிழகம் எங்கள் கட்சியின் ஆதரவை கேட்டால் அவர்களோடு நாங்கள் இணைந்து செயலாற்றுவோம்.

எங்களோடு திராவிட கட்சிகள் பேசுவதற்கு அழைப்பு விடுத்தாலும் அவர்களோடு நாங்கள் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம். குறிப்பாக அதிமுக எங்கள் கட்சியின் ஆதரவை கேட்டாலும் நாங்கள் தயாராக உள்ளோம்.

எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு நாங்கள் ஆதரவு தருவோம். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான ஐபிஎஸ் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அவர்கள் மீது 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை ஏற்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் நாங்கள் கூட்டணி பேசுவதற்கு தயாராக உள்ளோம்

முறையான கூட்டணி அமையாத பட்சத்தில் எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம். இவை அனைத்தும் வரும் 25 ந் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக