ஞாயிறு, 4 மார்ச், 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு


சென்னை: பரமக்குடி உயிர்ப்பலிகள் நடந்த சில மாதங்களுக்குள் மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.
வரும் 18ம் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேரில் சந்தித்து, வரும் 18ம் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்விக்கு தங்கள் கட்சியின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.

அதற்கு முதல்வர் ஜெயலலிதா தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது கழக பொருளாளரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் தலித்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். அப்போது ஜெயலலிதா அரசை அராஜகம் மிகுந்த அரசு என வர்ணித்து கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார் கிருஷ்ணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக