செவ்வாய், 20 மார்ச், 2012

மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை படைக்க முடியாது ஜான்பாண்டியன் பேச்சு


தஞ்சை: மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை, சரித்திரம் படைக்க முடியாது என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் சார்பில் அரசியலில் முத்தரையர்களின் நிலை குறித்த பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள முத்தரையர் அனைவரும் வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும். நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உறுதுணையாக இருக்கும். ஏழை, எளிய மக்கள் மீது பொய் வழக்கு போடுவதை போலீசார் நிறுத்த வேண்டும்.
பல வழக்குகள் போட்டு என்னை சிறையில் அடைத்தாலும், எனது சிந்தனைகளை யாரும் சிறை வைக்க முடியாது. இன்று அமைச்சர் பதவி வகிக்கும் நமது சமூகத்தினர் நமக்காக எந்த பணிகளையும் செய்வதில்லை. தேர்தல் நேரத்தில் ஓட்டு என்னும் ஆயுதத்தை நாம் கையில் எடுத்தால் எவராலும் நம்மை அசைக்க முடியாது.
ஆட்சிகள் மாறலாம். காட்சிகளும் மாறலாம். ஆனால், சமுதாயம் மாறாது. முத்தரையரும், தேவேந்திர குலத்தினரும் இணை பிரியாத நண்பர்கள். நாம் ஒன்றாக இருந்து வரலாறு படைப்போம்.
உழைக்கும் நமது சமுதாயத்தை இழிவுபடுத்துவோரை தூக்கி எறிவோம். மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை படைக்கவும், சரித்திரம் படைக்கவும் முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக