திங்கள், 11 ஜூன், 2012

தமிழின வேர்களும் விழுதுகளும்



                                             Inline image 1
                                                                                தமிழர் வேந்தன்(ஐந்திரம் படைத்த இந்திரன்)

               இந்நில உலகில் மனித இனம் தோன்றியது முதல் முதன் முதலில் மொழி படைத்து குடும்பம்-சொத்து-அரசு போன்ற நிறுவனங்களைக் கட்டி சீரோடும் சிறப்போடும் உயர்ந்து வாழ்ந்து வந்தது தமிழினம்.உலகின் முதன் மொழி தமிழ் எனவும் தமிழர் பண்பாடே உலகின் முதல் நாகரிகம் எனவும் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் உலகிற்கு எடுத்தியம்பி தக்க தரவுகளோடு நிறுவியுள்ளார். அத்தகைய தமிழர் நிலமானது பண்டைய காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நன்கு வகைப்படும் என தொல்காப்பியம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
                    "மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
                     சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
                     வேந்தன் ( இந்திரன்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
                     வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்"
குறிஞ்சி நிலமக்கள் குறவன்-குறத்தி எனவும் முல்லை நில மக்கள் இடையர்-இடைச்சியர் எனவும் மருதநில மக்கள்
மள்ளர்-மள்ளத்தியர் எனவும் நெய்தல் நில மக்கள் பரதவர் எனவும் அழைக்கப்பட்டனர்.குறிஞ்சியும் முல்லையும் திரிந்து பாலை என்ற நிலம் தோன்றியதாகவும் அதன் மக்கள் கள்ளர், எயினர்-எயிற்றியர் எனவும் தொல்காப்பியத்திற்கு பின் தோன்றிய தமிழ் நூல்கள் கூறுகின்றன.உலகின் நாகரிகம் ஆற்றங்கரைச் சமவெளிகளிலேதான் தோன்றியதாக உலக வரலாறுகள் கூறுகின்றன. வயலும் வயல் சார்ந்த ஆற்றங்கரைச் சமவெளிகளுமே மருதநிலம் என அழைக்கப்படுகிறது.அவ்வாறான மருத நிலம் பற்றியும் அந்நிலத்தின் தமிழர் வாழ்வியல் பற்றியும் இங்கு காண்போம்.

மருத நிலமும் தமிழர் வாழ்வும்
          மருதநிலத் தலைவனாக தமிழர் வேந்தனும் அதன் மக்களாக மள்ளர்களும் குறிப்பிடப்படுகிறார்கள்.மருதநில மக்களின் முதன்மைத்தொழில் வேளாண்மை ஆகும். மேற்கண்ட தொல்காப்பியக் குறிப்பினை எடுத்துக்காட்டுவதைப்போல மருதநிலத் தலைவனான இந்திரனைத் தொழுது மள்ளர்கள் காவிரி நாடு (சோழ நாடு) முழுவதும் நாற்று நடவைத் தொடர்வதாக சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார்.அப்பாடலானது,
                 " உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு 
          இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் 
          தொழுது நாறு நடுவார் தொகுதியே 
          பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம். " என வணங்குகிறது.
மேலும், மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களின் குல முதல்வனாம் தேவேந்திரனைத் தொழுது நாற்றங்கால் பாவுவதை "வயலில் உழுது சேற்றைப் பரம்படித்துச் சமன்செய்து குற்றமில்லா மள்ளற்குலத்தினர் தம்குல முன்னோரான தேவேந்திரனைத்(வலாரி)  தொழுது வெண்முளை கட்டிய நெல்மணிகளை நாற்றங்காலில் தெளித்தனர்.பின்பு நாற்றங்காலில் உள்ள நீரை முறையாக வடித்தனர் " என விநாயகப் புராணம் விளக்குகிறது.அப்பாடலானது,
           "உழுத சேற்றினை யாடியி நோத்திடப் 
             பழுதின் மள்ளர் பயிற்றி வலாரியைத் 
             தொழுது வெண்முளை தூவித் தெளித்தபின் 
              முழுது நீரைக் கவிழ்ப்பர் முறைமையால்."(பா-103) எனக் குறிப்பிடுகிறது.
பறவைகள்,விலங்குகள் போன்ற உலகின் பல்வேறுபட்ட உயிரினங்களுக்கும் தமது வேளாண் தொழிலால் மள்ளர்கள் உணவளிப்பதை பேரூர்ப் புராணம் குறிப்பிடுகிறது.இதன் மூலம் தமிழர்களின் வேளாண்மையோடு பண்டைய அறம் சார்ந்த பண்பாடுகளையும் அறிய முடிகிறது.அப்பாடலானது,
                   "பறவையும் விலங்கும் பல்வே றுறவியும் பசியிற் றிர
                    அறவினை நாளும் ஆற்றும் அகன்பணை விளைவு நோக்கி
                     நறவுணு மகிழ்ச்சி துள்ள நலத்தகு நாளான் மள்ளர்
                     மறவினைக் குயங்கை யேந்தி வளாவினர் வினையின் மூண்டார்.எனப் போற்றுகிறது.
 
            ஏறும் போரும் இணைபிரியாது என்ற பழமொழிக்கு ஏற்ப மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்க்குடிகளாகவும் இருந்து பேரரசுகளைக் கட்டி தமிழினத்தைக் காத்துநின்றமையை சங்க இலக்கியங்கள்  போற்றுகின்றன. திருவிளையாடற்புராணம்மள்ளர்களின் போர்த்திறனை வேளாண்திறனோடு சேர்த்து "பலநிற மணிகளையும் கோர்த்துச் செய்த மாணிக்கமாலை போன்று பலநிறக் காளைகளையும் ஏரில்பூட்டி கலப்பையில் உள்ள இரும்பினால்செய்த கொழுவு தேய , வாள்வீசிச் சண்டையிடும் போர்த்தொழிலில் வல்ல கரிய கால்களையுடைய மள்ளர்கள், நிலமகளின் உடல்போன்ற நிலத்தை உழுதனர். உழுத ஏர்த்தடங்களில் குருதி போன்ற சிவந்த சேற்றிடத்தில் சிவந்த மாணிக்கம் போன்ற தானிய மணிகள் ஒளிவீசின " எனப் பாடுகிறது.அப்பாடலானது,
                  "பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
                   அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
                   நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
                   சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு மன்னோ" (செ-19) என சுட்டுகிறது.
கம்பர் தமது இராமாயணத்தில் மள்ளர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்துவதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு கீழ்க்கண்டவாறு ஒப்பிட்டு கூறுவார்.அப்பாடலானது,
                   "நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
                     உதிர நீர் நிறைந்த காப்பின்
                     கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
                     இன மள்ளர் பரந்த கையில்
                     கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
                     பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
                     தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
                     எனப் பொலியும் தகையும் காண்மின்”  - கம்பராமாயணம்.
இதிலிருந்து மருதநிலத் தமிழர்களான மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்ப்படையாகவும் இருத்தமை தெளிவாகும்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட, தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கும் நிகண்டுகள் மள்ளர்களை மருத நில வேளாண்குடிகளாகவும் போர்வீரார்களாகவும் விளக்கம் கண்டுள்ளது உற்றுநோக்கத்தக்கது.
                  "செருமலை வீரரும் திண்ணியோரும்
                   மருத நில மக்களும் மள்ளர் என்ப" - பிங்கல நிகண்டு.
                   "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
                    வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" - திவாகர நிகண்டு.
        தி.பி 15,16 -ஆம் நூற்றாண்டுகளில் பாண்டிய, சோழ, பேரரசுகள் வடுக்கப் படையெடுப்புகளினால் முற்றாக அழித்தொழிக்கப் பட்டன.தமிழர் மண் சூறையாடப்பட்டு தமிழினம் தலைசாயத் தொடங்கியது.எந்தத் தமிழ் இலக்கியங்கள் தமிழினத்தைப் போற்றி வணங்கியதோ அதே தமிழ் இலக்கியங்களைக் கொண்டு மள்ளர்களை பள்ளர்கள் என ஏசி நூற்றுக்கணக்கான பள்ளு சிற்றிலக்கியங்களை எழுதிக்குவித்தனர் தமிழினப் பகைவர்கள்.ஓர் இனத்தை அழிக்கவேண்டுமெனில் அதன் பண்பாட்டை வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற உண்மையை மிகச்சரியாக உள்வாங்கி செயல்பட்டனர் தமிழினப் பகைவர்கள். பள்ளர் என யாரைக் குறிப்பிடுகிறோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க மள்ளர்களே பள்ளர்கள் எனப் பல இடங்களில் குறிப்பிட்டும் எழுதினர்.முக்கூடற்பள்ளு எனும் பள்ளு சிற்றிலக்கியமானது "மள்ளர்குலத்து பள்ளர்-பள்ளியர்" எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.அப்பாடலானது,
                    "மள்ளர் குளத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் 
                     பள்ளக் கணவன் எனில் பாவனைவே றாகாதோ... " - (பா-13)
                     "செவ்வியர் மள்ளர்கள் தேவியர் பள்ளியர் ..." - (பா-20)
மேலும், மள்ளர்களே பள்ளர்கள் என்பதை செங்கோட்டுப்பள்ளு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது,
                    " வந்ததுமே திருக்கூட்டமாகவும்    
                      மள்ளரும் பள்ளி மார்களும் கூடியே... "  எனக் கூறுகிறது அப்பாடல்.
கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட பேரூர்ப்புராணம் சிவனை (பேரூர் பட்டீஸ்வரர் -கோயமுத்தூர்) பள்ளன் எனவும் மள்ளன் எனவும் மாறி மாறி அழைக்கிறது. அப்பாடலானது 
          " இந்திரன் பிரமனாரணன் முதலா மிமையவர் நுகமலை மேழி 
            வெந்திறள்  கொழுவார் கயிறுகோல் பகடு வித்துனா றனைத்துமா யங்கு 
            வந்தனர் பயில வன்கண நாத றேவல்செய் மள்ளய் விரவி 
           முந்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழிவழி வினைதொடங் கினரால்"-(செய்-28) எனப் போற்றுகிறது.
சிலர் மள்ளர்களை பொதுவாக உழவர் என பொத்தாம்பொதுவாக மூடிமறைப்பது தமிழின வரலாற்றைத் திரிக்கும் கொடுஞ்செயல் ஆகும்..அவ்வாறு மள்ளர் என்பதை உழவர் என்று பொருள்கொண்டால் போரிடும் வீரர்களையும் மள்ளர் என சங்க இலக்கியங்கள் கூறுவது ஏன்? ஆக மள்ளர் என்றால் மருத நில மக்களே என்பது இங்கு தெளிவாகிறது. காஞ்சிகாமச்சியம்மன் கோவில் செப்பேடு மள்ளர்களை கீழ்க்கண்டவாறு போற்றுகிறது.
          " தேவேந்திரப் பள்ளரில்' வெள்ளானன வேந்தன், மிக விருது பெற்றவன் சேத்துக்கால் சென்னன், சென்னல் முடி காவலன், தேவேந்திர வரபுத்திரன், மண்வெட்டி கொண்டு மலையைக் கடைந்த கண்ணன், வெள்ளானனக் கொடி படைத்தவன், வெள்ளைக்குடை, முத்துக்குடை, பவளக்குடை, பஞ்சவர்ணக்குடை, முகில் கொடி, புலிக்கொடி, அலகுக்கொடி படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் குருணிகுர 'தேவேந்திர பள்ளர் -(காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்)

மேலும் மள்ளர்கள் குடும்பர்,காலாடி,பண்ணாடி,மூப்பன்,பலகான்,ஆற்றுக்காலாட்டியார்  ,நீராணிக்கர்,தேவேந்திரகுல வேளாளர்,இந்திரகுலத்தவர் எனப் பல பெயர்களில் இன்றும் பல்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகின்றனர்.மள்ளர்களின் இந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொருள் உண்டு.இது போன்று  ஒவ்வொரு தமிழினக் குழுக்களுக்கும் ஒரு வரலாறு உண்டு.அவ்வரலாறுகளைத்  தொகுத்துப் பார்க்கையில் தமிழினத்திற்க்கிடையேயான உறவுகள் ஒரு மர விழுதுகள் என்பது புலனாகும்.
                     --- தமிழூரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக