திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நிலத்தடி நீர் உறிஞ்சுவதை உடனடியாக தடுக்காவிடில்போராட்டம்; எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அறிவிப்பு

திருநெல்வேலி, நிலத்தடி நீர் உறிஞ்சுவதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலும் நிலத்தடி நீர் அபாயகரமான கட்டத்தை தாண்டி கீழே சென்றுவிட்டது. மாவட்ட மக்கள் பெரும்பாலும் குடிநீர், வீட்டு உபயோகம், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் ஆழ்துளை கிணறுகளில் நீரை உறிஞ்சி கடத்தி செல்வதால் தினமும் குடிநீர் மற்றும் விவசாய கிணறுகள் வற்றிவருகின்றன. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட வேளையில் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. இச்சூழலில் தூத்துக்குடி மாவட்டமே மிகப்பெரிய அளவில் குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. நிலத்தடி நீர் கடத்தி செல்லப்படுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பலமுறை மாவட்ட அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் எடுத்துச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீர் அபகரிப்பை தடுத்திட தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும். போராட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக