வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்: போலீஸ் அதிகாரிகளை இடம் மாற்ற மனு தாக்கல்

சென்னை: வரும் செப்டம்பர் 11ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால், அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் பணியில் இருந்தால் மீண்டும் கலவரம் ஏற்படும். எனவே அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினமான செப்டம்பர் 11ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலித் அமைப்புகளை சேர்ந்த மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அன்று, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை போலீசார் வழி மறித்து கைது செய்துதாக பரவிய தகவலை அடுத்து தென் மாவட்டம் முழுவதும் கலவரம் வெடித்தது.
இதில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அரசு பஸ் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டது. இதனால் கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்வேல் ராஜன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மள்ளர் கழகம் தலைவர் சுபா. அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அரசு நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது. இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அரசியல் சார்பு இல்லாத சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனறு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் விசாரணை நடத்துவார் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இந்த கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் நிர்வாகி குரு விஜயன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் தாமுவேல்ராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் புகழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கு மனுவில், "கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிலர் சென்ற போது கலவரம் ஏற்பட்டு, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது மனித உரிமையை மீறிய செயலாகும்.
தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சந்தீப்மிட்டல், ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வர் காளிராஜ் பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகிய அதிகாரிகள் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்காததே இப் பிரச்சனைக்கு காரணமாகும்.
இந்த சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில், சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் வரும் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இந்த சமயத்தில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் அங்கு பணியில் இருந்தால், மீண்டும் பதட்டம், கலவரம் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மேற்கண்ட அதிகாரிகளை அங்கிருந்து இடமாற்றம் செய்ய தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக