புதன், 29 ஆகஸ்ட், 2012

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: காவல்துறை அதிகாரிகளை மாற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஆக 24- தமிழக மக்கள் உரிமை கழக ஒருங்கிணைப்பாளர் வக்கீல் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிலர் சென்றபோது கலவரம் ஏற்பட்டது.

அப்போது காவல்துறையினர்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது மனித உரிமையை மீறிய செயலாகும். தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சந்தீப்மிட்டல், ராமநாதபுரம் காவல்துறை  சூப்பிரண்டு மகேஸ்வர் காளிராஜ் பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகிய அதிகாரிகள் சட்டம்-ஒழுங்கை முறையாக பராமரிக்காததே இந்த பிரச்சினை பெரிதாக காரணமாக அமைந்தது.

மதுரை உயர்நீதிமன்ற  கிளையின் உத்தரவின் பேரில், சி.பி.அய் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இமானுவேல் சேகரனின் நினைவு தினம் வருகிற 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அந்த சமயத்தில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் அங்கு இருந்தால், மீண்டும் பதட்டமான சூழ்நிலை ஏற்படக்கூடும்.

எனவே மேற்கண்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக