செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கல்வி உதவித் தொகை திட்டம்: புதிய தமிழகம் கட்சி கோரிக்கை

சென்னை, ஆக. 5: உயர்கல்வி பெற விரும்பும் ஏழை மாணவ, மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள உதவித் தொகை திட்டத்தை கல்லூரி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: சமூக நீதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவ, மாணவர்களுக்கு அரசு உதவிபெறும் தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அக் கல்லூரிகளில் நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த முடியாததால் ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
இப் பிரச்னை குறித்து நான் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். எனவே, அந்த கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 115 கோடியை முதல்வர் ஒதுக்கினார்.
மேலும், 1985-ம் ஆண்டு அரசு ஆணையின்படி, பட்டியலின மாணவ, மாணவர்களிடமிருந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அதையும் கல்லூரி நிர்வாகங்கள் செயல்படுத்துவதில்லை.
இந் நிலையில், முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தை எந்த கல்வி நிறுவனமும் அமல்படுத்துவதாகத் தெரியவில்லை.
எனவே, கல்லூரி நிர்வாகங்கள் அந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பட்டியலின மக்களிடம் கட்டணம் வசூலிப்பதையும் கைவிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக