வியாழன், 13 செப்டம்பர், 2012

பரமக்குடியில் செப்.11 இமானுவேல் சேகரன் நினைவு நாள்: பாதுகாப்பு ஏற்பாடு : ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் ஆய்வு






 பரமக்குடி, செப். 3: பரமக்குடியில் செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. அன்று அஞ்சலி செலுத்த வருவோர், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.  பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  கடந்த ஆண்டு அவரது நினைவு நாளின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  பரமக்குடி பகுதியில் பதற்றமான பகுதிகள், அஞ்சலி செலுத்த வருவோருக்கான வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், நினைவிடம் செல்லும் வழிகள் குறித்து ஏ.டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.  பின்பு ஆர்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பு, இமானுவேல் சேகரன் நினைவிடம், நினைவிடத்திலிருந்து அஞ்சலி செலுத்தியோர் வெளியே செல்ல ரூ 2.60 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  ஐந்துமுனை சந்திப்பில் பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்து கேட்டார். பின்பு முதுகுளத்தூர் சாலையில் பொன்னையாபுரம், பாலன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வழித்தடங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார்.  அப்போது ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, டி.ஐ.ஜி. வரதராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக