ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

செப்.11 இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அனுமதி அட்டை பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை






 ராமநாதபுரம், செப். 7: பரமக்குடியில் வரும் 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயமான முறையில் அனுமதி அட்டை பெற வேண்டும் எனவும், அதனைப் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வட்டாரப் போக்குவரத்து  அதிகாரி கார்த்தலிங்கன் தெரிவித்துள்ளார்.  ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாடகைக் கார் மற்றும் சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி கார்த்தலிங்கன் தலைமை வகித்துப் பேசியதாவது:  இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு வருவோர் எந்த ஊரிலிருந்து புறப்பட்டாலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளரின் ஒப்புதல் பெற்றும், அவர்கள் வழங்கும் அனுமதி அட்டையை வாகனங்களின் முன்னும், பின்னும் உள்ள கண்ணாடிகளில் ஒட்டியிருக்க வேண்டும். அவ்வாறு ஒட்டிய பின்னரே வாகனங்கள் எதுவும் இயக்கப்பட வேண்டும்.  காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை தவிர, மாற்றுப்பாதையில் கண்டிப்பாக செல்ல அனுமதியில்லை. மீறிச் செல்லும் வாகனங்கள் மீதும், அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஊர்வலத்தில் பங்கேற்கும் வாகனங்கள் அனைத்தும் மூடப்பட்டதாக இருக்க வேண்டும். லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை. வாகனங்களின் மேற்கூரைகளில் அமர்ந்து கொண்டும், ஜன்னல் மற்றும் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும் வந்தால், அந்த வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  வாகனங்களில் மற்றவர்கள் புண்படும்படியான வாசகங்களை ஒட்டிக் கொண்டு வரக்கூடாது. குடிபோதையிலும், செல்போனில் பேசிக் கொண்டும் வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். காவல்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தின்  7 சோதனைச் சாவடிகளிலும், போலீஸôரோடு இணைந்து இயக்கஊர்தி ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டு பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு அதிகாரியாக எஸ். கண்ணன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார். வாகன ஓட்டுநர்கள் புகார்கள் எதையும் பதிவு செய்வதாக இருந்தால், அவரது 94873-10103 செல்போன் எண்ணிலோ அல்லது அந்தந்த சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள இயக்கஊர்தி ஆய்வாளர்களிடமோ புகார்களைப் பதிவு செய்யலாம், எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக