செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மருதம் தொலைகாட்சி துவங்கப்பட்டது


தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளரினமே…
வாழ்த்துக்கள்…

தமிழ்நாடு தேவேந்திர குல வேளார் சங்கத்தலைவரும், அகில இந்திய தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத்தலைவருமான ஐயா பேராசிரியர். குருசாமி சித்தர் அவர்களால் 09.09.2012 அன்று கோயம்புத்தூர், தமிழ்ப் பண்பாட்டு சமூக ஆய்வு மன்ற அரங்கில், "மருதம் தொலைக்காட்சி"யின் முன்னோட்ட நிகழ்வாக இணைய தள ஒளிபரப்புச் சேவை துவக்கி வைக்கப்பட்டது.
மள்ளர் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் திரு.பொன்னையா, அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சமூக அறிஞர் பெருமக்கள் பெருந்திரளான அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். திருவாளர்கள் சண்முகனார், அய்யனார், ரசிதாசன், ராஜேந்திரன், தங்கவேலு மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். "மருதம் தொலைக்காட்சி" இணைய தள சேவையினை துவக்கி வைத்த மருதம் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் ஐயா பேராசிரியர். குருசாமி சித்தர் பேசுகையில், 
"மருதநிலப் பண்பாடு 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. தமிழகத்திலும், இந்தியாவிலும் மற்றும் உலகமெங்கிலும் வாழுகின்ற மூவேந்தர் மரபான தேவேந்திர குல வேளாளர்கள் எனும்'மள்ளர்கள்' இந்த மருதம் தொலைக்காட்சியின் இணையதள சேவையினைப் பயன்படுத்திக் கொண்டு தம் வரலாறுகளையும், மரபையும் மீட்டெடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு முயலவேண்டும். உலக நெல் நாகரிகத்தின் மூத்த குடியினரான மள்ளர்கள் தங்களது மாண்புகள் பற்றித் தெரிந்து கொள்வதோடு, சமகால தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டு வாழ்வில் உயர்வடைய வேண்டும். 
இலவசங்களுக்காக நமது அடையாளத்தை இழந்து விடக் கூடாது. நம்மை ஆதி திராவிடர்கள் என்று அழைப்பது முரண். நாம் தமிழினத்தின் மூத்த குடியினர். தமிழர்கள் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாகப் பேணிக் காத்து வந்த பண்பாட்டின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

1990-களிலிருந்து நாம் வெளியிட்ட 'மள்ளர் மலர்' எனும் சமூக ஆய்வு இதழின் அனுபவம் நிச்சயம் நமக்குக் கைகொடுக்கும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை சீரும், சிறப்புமாக ஆட்சி செய்து வந்த வேந்தர் குலத்தவர் இன்று ஆட்சியை இழந்து அடையாளமற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள். இது குறித்து 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்தும், பல்வேறு சமூக அறிஞர் பெருமக்கள் ஆய்வு முடிவுகளைத் தெரிவித்திருந்தும் நமது மக்கள் வரலாற்றில் இன்னும் தெளிவு பெற இயலவில்லை.  இந்த நிலை மாற வேண்டும். 'மருதம் தொலைக்காட்சி' தன்னுடைய அயராத சேவையின் மூலமாக நமது சமூகத்தின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பணியாற்றும்" என்று குறிப்பிட்டார். 
இந்நிறுவனம் ஒளிபரப்பைத் துவங்குவதற்காக உலக அளவில் ஊடக தொழில்நுட்ப சேவை வழங்கும் குழுமங்களின் சேவை ஒப்பந்தத்தை மருதம் தொலைக்காட்சிப் பெற்றுள்ளது. இது தமிழர்களின் பண்பாட்டை மீட்கும். இந்நிறுவனம் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களைப் போன்று பொழுது போக்கு, செய்தித் தொகுப்பு, நேரலை, அரசியல், சமூகம், மெய்யியல், வேளாண்மை, மரபு, கல்வி, மருத்துவம், வணிகம், தொழில், இலக்கியம், பன்னாட்டு நிகழ்வு, விளையாட்டு, பன்னாட்டுத் தமிழர்கள் செய்தி என பன்முகத் தளத்தில் செயலாற்றும்.  இது உலகத் தமிழர்களுக்கான ஒப்பற்ற தொலைக்காட்சியாக மாறும். 
உலகம் முழுவதும் பரவி நிற்கின்ற மள்ளர் சமூகத்துப் பெருமக்கள் அனைவரும் இணைந்து நின்று செயலாற்றி நமது வரலாற்றை, பண்பாட்டை மீட்டெடுக்கக் கூடிய தருணம் வந்திருக்கிறது என்று நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக