வியாழன், 11 அக்டோபர், 2012

முதுகுளத்தூர் கலவரம் இம்மானுவேல் கொலை


முதுகுளத்தூர் கலவரம் இம்மானுவேல் கொலை

 
1957 பொதுத் தேர்தலுக்குப்பின், காமராஜர் ஆட்சிக்கு சில சோதனைகள் ஏற்பட்டன. அதில் முக்கியமானது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த வகுப்பு கலவரமாகும். 1957 ஜுலை முதல் செப்டம்பர் வரை இரு சமூகத்தினர் இடையே நடந்த இந்த கலவரத்தில், ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர்.  

முதுகுளத்தூரில் அமைதியை நிலை நாட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் செப்டம்பர் 10 ந்தேதி சமாதானக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் சர்வ கட்சிப் பிரமுகர்கள், வட்டாரத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேவர்கள் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரும், ஆதிதிராவிடர்கள் சார்பில் இம்மானுவேலும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதங்கள் நடந்தன. சமாதானம் ஏற்படவில்லை.இந்த கூட்டத்துக்கு மறுநாள் (11 ந்தேதி) காலை இம்மானுவேல் பஸ் மூலம் பரமக்குடிக்கு சென்றார். அங்கே நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். அன்று இரவு 8.30 மணிக்கு இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டார்.

பஸ் நிலையத்தில் ஒரு கூட்டம் அவரை சுற்றி வளைத்து வெட்டி கொன்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடித்தது. இம்மானுவேலை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய, கீழ்த்தூவல் கிராமத்துக்கு போலீசார் சென்றனர். அப்போது, அரிவாள், கம்பு, கத்தி முதலிய ஆயுதங்களுடன் பலர் கூட்டமாக வந்து போலீசாரைத் தாக்கினர்.

இதைத்தொடர்ந்து, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில், 5 பேர் இறந்ததாக போலீஸ் அறிவித்தது. "இல்லை. அப்பாவி மக்கள் ஐந்து பேரைப் பிடித்து அடித்து, கைகளையும், கண்களையும் கட்டி, குளக்கரையில் நிற்க வைத்து சுட்டுக்கொன்றனர்" என்று கீழ்த்தூவல் மக்கள் குற்றம் சாட்டினர்.

இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு, வருவாய்த்துறை வாரியத்தின் உறுப்பினர் எஸ்.வெங்க டேசுவரனுக்கு அரசாங்கம் உத்தரவிட்டது. அவர் பரமக்குடிக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அரசாங்கத்திடம் அவர் அறிக்கை கொடுத்தார்.

"பயங்கர ஆயுதங்களால் தாக்க வந்தவர்களை அடக்க போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் 5 பேர் மாண்டனர். எவரையும் கட்டி வைத்து சுட்டுக்கொல்லவில்லை" என்று அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.இந்த அறிக்கையை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை.

இது தொடர்பாக, சட்டசபையில் காமராஜர் தலைமையிலான மந்திரிசபை மீது 28.10.1957 ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கம்யூனிஸ்டு தலைவர் எல்.கல்யாணசுந்தரம் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அவர் பேசுகையில், "ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தின் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினால், வெறும் ஐந்து பேர் மட்டும்தான் சாவார்களா?" என்று கேட்டார்.

தி.மு.க. தலைவர் அண்ணா பேசும்போது, "முதுகுளத்தூர் கலவரத்தில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை தெரியும்" என்று வலியுறுத்தினார். விவாதத்துக்கு நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் பதில் அளிக்கையில், ஐந்து மறவர்களின் கைகளை கட்டி போலீசார் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்ட புகாரை மறுத்தார்.

"தமிழ்ப்பண்பு படைத்த நமது போலீஸ் அதிகாரிகள், ஒருபோதும் நிரபராதிகளை சுடமாட்டார்கள்" என்று அவர் கூறினார். முடிவில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 28 பேர்களும், எதிராக 146 பேர்களும் வாக்களித்தனர். 

தி.மு.கழகம் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. "நீதி விசாரணை நடத்த அரசாங்கம் மறுப்பதால், வெளிநடப்பு செய்கிறோம்" என்று கூறிவிட்டு, வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே சபையில் இருந்து அண்ணாவும், மற்ற தி.மு.க. உறுப்பினர்களும் வெளியேறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக