வியாழன், 11 அக்டோபர், 2012

சட்ட எரிப்பு நாள் சிந்தனை: முதுகுளத்தூர் கலவரமே சாதி எரிப்புப் போராட்டத்தின் பின்னணி


முதுகுளத்தூரில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்களுக்கு எதிராக நடடநத சாதிக் கலவரத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே தலைவர் பெரியார் தான். 1957 ஆம் ஆண்டு பெரியார் அறிவித்த சாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புக் கிளர்ச்சியே முதுகளத்தூரில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான கலவரத்தின் தொடர்ச்சியான தாக்கம்தான். இந்த வரலாற்று உண்மைகள் - இருட்டடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ‘ஆதித் திராவிடத் தோழர்களுக்கு’ என்று ‘விடுதலை’யில் அப்போது வெளிவந்த தலையங்கம், இந்த உண்மையை தெளிவுபடுத்துகிறது. சாதி ஒழிப்பு சட்ட எரிப்பு நாள் நினைவாக அத் தலையங்கத்தின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்:

நூற்றுக்கணக்கான பெண்கள் சட்டத்தைக் கொளுத்தப் போவது உறுதி. முதுகுளத்தூர் கலவரத்திற்குப் பிறகு தமிழ் நாட்டிலுள்ள ஆதி திராவிடர்கள் அனைவரும் காமராசர் ஆட்சிக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளை நஞ்சாக வெறுத்து விட்டனர். நூற்றுக் கணக்கான ஆதி திராவிட உயிர்கள் பலி யாக்கப்பட்டிருப்பதையும், ஆயிரக் கணக்கான குடிசைகள் தீக்கிரையாக்கப் பட்டதை யும் சிறிதும் பொருட்படுத்தாதபடி ஐந்து “உயர்சாதி”க்காரர்களை போலீசு சுட்டுக் கொன்றது பற்றி கண்ணீர் வடிப்பதும், திரு. முத்துராமலிங்க தேவரை விடுதலை செய்ய வேண்டு மென்று கடையடைப்பு செய்யவும் இதற்காக சட்டசபையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதும், இதற்காக சட்டசபையை விட்டு வெளியேறுவதும் போன்ற நடத்தைகளால் அரசியல் எதிர்கட்சிகள் என்பவை ஆதி திராவிட சமுதாயத்திற்கு துரோகம் செய்து விட்டன. இந்த மன்னிக்க முடியாத குற்றத் திற்காக ஆதி திராவிட சமூகம் இந்த எதிர் கட்சிகள் மீது இன்று ஆத்திரப்பட்டு கொதிப் படைந்து இருக்கிறது.

நேற்று சென்னைக் கூட்டத்தில் பேசிய தலைவர் பெரியார் அவர்கள்கூட “நான் சட்ட சபையில் இடம் பெற்றிருக்கக்கூடிய பொல்லாத வேளை ஏற்பட்டிருந்தால் ஏன் முன் கூட்டியே கலகக்காரர்களை சுட்டு வீழ்த்தியாவது ஆதி திராவிட உயிர்களையும், வீடுகளையும் காப் பாற்றியிருக்கக் கூடாது?” என்று மந்திரிகளை நோக்கி கேட்டு இருப்பேன்” என்று கூறினார். எனவே சாதி வெறிக்குச் சிறிதுகூட இடமளிக்கக் கூடாது என்பதில் திராவிடர் கழகத்தைப் போன்ற தீவிர லட்சியங்கொண்ட கட்சியே இந்நாட்டி லில்லை.

இன்று அரசியல் சட்டத்தைக் கொளுத்து கிறோம் என்றால், எதற்காக? அதில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்காகத்தான். சாதி உள்ள வரையில் தீண்டாமை ஒழியுமா? ஒழிந்திருக்கிறதா? அரசியல் சட்டத்திலுள்ள தீண்டாமை ஒழிப்பு விதிகூட, டாக்டர் அம்பேத்கார் அவர்களைத் திருப்தி படுத்து வதற்காகவே தவிர, உண்மையான நோக்கத்துடனல்ல. இதை உணர்ந்துதான் டாக்டர் அம்பேத்கார் அவர்கள்கூட, “இந்த அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டும். நானே இதை கொளுத்தப் போகிறேன்” என்று ராஜாங்க சபையில் 3.9.1953-லேயே கூறினார். அதன் பிறகு இரண்டாண்டு கழித்துத்தான் சுமார் மூன்று லட்சம் ஆதித் திராவிடரை பவுத்த நெறியில் சேர்த்து விட்டுத் தாமும் அதைத் தழுவினார். இதன் விளைவாகத்தான் அவரைத் தந்திரமாகக் கொலை செய்தார்கள் இந்துமத வெறியர்கள். ஆகவே, அரசியல் சட்டம் ஆதித் திராவிடரின் தீண்டாமையொழிப்புக்குக்கூடப் பயன்பட வில்லை என்பதற்கு டாக்டர் அம்கேத்காரை விடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறென்ன வேண்டும் என்று கேட்கிறோம்.

‘விடுதலை’ தலையங்கம் 11.11.1957

சட்ட எரிப்பு: தஞ்சை மாநாட்டுத் தீர்மானம்

1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் பெரியார் இயக்கம் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிட்டு எரிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டத்தை நடத்தியது. இதற்கான போராட்ட அறிவிப்புக்காக 3.11.1957 அன்று பெரியார் தஞ்சையில் சிறப்பு மாநாட்டைக் கூட்டி போராட்டத்தை அறிவித்தார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது:

அரசியல் சட்டத்தில் கண்டுள்ள மதப் பாதுகாப்பு, மத உரிமை என்பதில் இந்துமதம் என்பதை எடுத்துக் கொணடால், அது வர்ணாசிரமதர்மம் என்கிற பிறவியில் மக்களை சாதிகளாகப் பிரித்து, அவரவர் களுக்குத் தொழிலையும் கற்பித்து, ஒரு பிறவி உயர்ந்தது, முதன்மையானது. மற்றொரு பிறவி தாழ்ந்தது, இழி வானது என்பதான கருத்துகளை அமைத்து, அந்த அமைப்பைக் காப்பதுதான், மத, சுதந்தரம் என்பதாக சாஸ்திரங்களிலும் மற்றும் மத ஆதாரங்களிலும் கூறுவதைக் கொள்கையாகவும், நம்பிக்கையாக வும் கொள்வதை உரிமையாக்குவதாக ஆகிறது. இந்த உரிமையானது இந்நாட்டு, இந்துப் பொதுமக்களில் 100-க்கு 3 பேர் களை மேல்சாதி, உயர்ந்த பிறவி, உடல் உழைப் பில்லாமல் இருந்து கொண்டு மற்றவர்கள் உழைப்பில் சுகவாசிகளாக வாழ்வதென்றும், 100-க்கு 97 பேர்களான மக்களைக் கீழ்சாதி இழிமக்கள் என்றும் உடலுழைப்பு வேலை செய்து கொண்டு அடிமையாய், பாட்டாளி யாய், வாழ வேண்டியவர்கள் என்றும், பின் சொல்லப் பட்ட மக்கள் கல்வியறிவுக்கும், நீதி, நிர்வாக உத்யோகங்கள் பதவிகளுக்கும் தகுதியற்றவர் களென்றும் ஆக்குவதாக இருப்பதால், இந்த மதக் காப்பாற்று உரிமை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டு மென்பதும் அவசியமென்று இம்மாநாடு கருதுகிறது.

இந்தக் காரியங்கள் சாதாரணமான தன்மையில் மாற்றப்படாவிட்டால் எந்தவிதமான முறையைக் கையாண்டாவது மாற்றித் தரும்படி செய்ய வேண்டி யது பொது மக்களின் இன்றியமையாத கடமை யென்று இம்மாநாடு கருதுகிறது. மற்றும் இந்த அரசியல் சட்டமானது பொது ஜனவோட்டு உரிமையில்லாமலும் சரியான தேர்தல் முறையில்லாமலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளப் பட்டவர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையினால் வகுக்கப்பட்ட சட்டமாதலாலும்.

இந்தச் சட்டத்தைத் தயாரித்த ஆறு பேர்களில் பெரும்பான்மையானவர் பார்ப்பனர் ஆதலாலும், பார்ப்பனர் முஸ்லீம் பஞ்சமர் ஆகியவர்களைத் தவிர்த்த பொது ஜனத் தொகையில் 100-க்கும் 75 பேர் களாயுள்ள ‘சூத்திரர்’ என்று ஆக்கப்பட்டிருக்கின்ற பெருங்குடி மக்களுக்கு பிரதிநிதித்துவமில்லாத ஒரு சட்டம் செய்யும் குழுவைக் கொண்டு இச்சட்டம் வகுக்கப்பட்டிருப்பதாலும்,

இந்த சட்டமானது ‘நான்காம் சாதி’ என்று கூறப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தத் தக்கதாக ஆகாது என்று இம்மாநாடு கருது கிறது. இப்படிப்பட்ட காரணங்களால் இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, சாதி, மதம் ஆகியவை காரணமாக, நீதி, சமத்துவம், சகோதரத் துவம், சுதந்திரம் ஆகியவை அளிக்கப்படாததா யிருப்பதால், இவைகளை முன்னிட்டு இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடானது என்று கருதுவதால், இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக, 1949 நவம்பர் 26-ந் தேதி என்ற அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து இந்த நவம்பர் மாதம் 26-ந் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பன ரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக