புதன், 24 அக்டோபர், 2012

சுந்தரபாண்டியன்: உசிலம்பட்டி வழக்கா, தேவர் சாதி அழுக்கா?

தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், ரசிக இலக்கு யார் என்பதை கோடிட்டுக் காட்ட… முதல் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம் என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.
சசிகுமார்-சுந்தரபாண்டியன்
“சுந்தரபாண்டியன்”’ திரைப்படம் ஒன்றும் நாட்டை ‘திருத்த’ வந்த கருத்து சினிமா இல்லை. அப்படி அவர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த திரைப்படம் மோசமான பிற்போக்குத்தனங்களையும், அசூசையான பிழைப்புவாதத்தையும் நேர்மறையில் உணர்த்துகிறது. அவற்றை அன்றாட வாழ்க்கையின் இயல்புகள் போல சித்தரிக்கிறது. காமடி, செண்டிமெண்ட் முதலான அதுவும் தேய்ந்து போன அரதப்பழசான காட்சிகளின் ஓட்டத்தில் பார்வையாளர்கள் அதை உணர்வாளர்களா என்பது சந்தேகம்தான்.
சுந்தர பாண்டியன்’ என்ற தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், இந்தப் படத்தின் ரசிக இலக்கு யார் என்பதை நமக்கு கோடிட்டுக் காட்ட… திரை விலகி ஆரம்பக் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம்’ என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.
“இதுதான் உசிலம்பட்டி”’ என்ற வாய்ஸ் ஓவரில் முத்துராமலிங்க தேவர் பெயர் பலகையுடன் துவங்குகிறது படம். சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவரை “எங்க ஆளுகளை தவிர யாரும் ஒட்டக்கூடாது… போ, போ’” என்று விரட்டிவிடுகிறார் ஒரு வயதானவர். தமிழ்நாட்டில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களுக்கு பிரபுவும், கார்த்திக்கும்தான் ஸ்டார்கள்’ என்கிறது குரல். இருவரும் தேவர் சாதி நடிகர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. “தமிழ்நாட்டில் ஆயிர கட்சிகள் இருந்தாலும் இவர்கள் வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார்கள். நேதாஜிதான் இவர்களுக்குத் தலைவர்”’ என்கிறார்கள். ஃபார்வர்டு பிளாக் பற்றியும் முத்துராமலிங்க தேவர் பற்றியும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.
“எவ்வளவு பாசக்காரய்ங்களோ, அதே அளவுக்கு கோபக்காரய்ங்க. குலசாமியா நினைச்சு வளர்க்கும் பொண்ணுங்க மனசை காதல், அது இதுன்னு எவனாவது கெடுத்துட்டா என்ன செய்வாங்க தெரியுமா?”’ என குரல் நிறுத்த.. இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர். ஆனால், இதுதான் உசிலம்பட்டியா? தேவர்கள் மட்டும்தான் உசிலம்பட்டியா?
ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களும் அதே உசிலம்பட்டியில்தான் வாழ்கின்றனர். பாப்பப்பட்டியும், கீரிப்பட்டியும் கூட உசிலம்பட்டிக்கு மிக அருகில்தான் இருக்கின்றன. இவர்கள் யாரும் அந்தக் காட்சியின் வரம்புக்குள் வரவில்லை. தலித்துக்களையும் இதர சாதி உழைக்கும் மக்களையும் கணக்கிலேயே எடுக்காமல் உசிலம்பட்டியின் ஒவ்வொரு அங்குலமும் தேவர் சாதிக்கு மட்டுமே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதை போல “இதுதான் உசிலம்பட்டி”’ என்கிறார்கள்.
சுந்தரபாண்டியன்இதை விட முக்கியமானது.. இந்த சுந்தரபாண்டியன் படமாகட்டும்… இதேபோல அண்மை ஆண்டுகளாக மதுரையை மையப்படுத்தி வந்த மற்ற தேவர் சாதி படங்களாகட்டும்… அனைத்தும் தேவர் சாதிவெறி நடவடிக்கைகளை ஒரு நகைச்சுவையான அழகியலுடன் சித்தரிக்கின்றன. இதை ஒரு ரசனையாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் அவரை நல்லவர் என்று நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் ரசிகர்களின் மனங்களில் ஆல்ரெடி எம்.ஜி.ஆர் நல்லவராக இருக்கிறார். மிச்சக்கதையை சொன்னால் போதும். அதுபோல கடந்த கால தேவர் சாதி பெருமித படங்கள், அந்த சாதி வெறியை ரசிக்க பழக்கப்படுத்தியிருக்கின்றன. அந்த அஸ்திவாரத்தில்தான் சுந்தரபாண்டியன் எழுந்து நிற்கிறது.
கதாநாயகன் சசிகுமார் அந்த ஊரின் பெரிய குடும்பத்தின் பையன். வேலை வெட்டி எதுவும் இல்லை. நண்பர்களுக்கு உதவுவதையே முழுநேர வேலையாக செய்கிறார். அந்த ஊர் வழியே செல்லும் பேருந்தில் கல்லூரி சென்று வரும் ஹீரோயினை சசிகுமாரின் நண்பர் காதலிக்கிறார். அவருக்கு உதவ இவர் போக… அங்கு ஏற்கெனவே அதே பெண்ணை இன்னொருவர் காதலிக்கிறார். அந்த இன்னொருவர் சசிகுமாரின் நண்பனின் நண்பன். உடனே “நீ ஒரு மாசம், அவன் ஒரு மாசம்”’ என அந்த பெண்ணை காதலிப்பதற்கான வாய்ப்பை நண்பர்களுக்கு ஓப்பன் டெண்டர் விடுகிறார். ஆனால் தன்னை டெண்டர் விட்ட சசிகுமாரையே காதலிக்கிறாள் அந்தப் பெண். பிறகு ஒரு கொலை, அதற்கான பழிவாங்கல்… என்று போகிறது கதை. இதில் நாம் பல விஷயங்கள் பேசலாம் என்றாலும், முக்கியமானது கதாநாயகின் பாத்திரம்.
தன்னை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். அந்த இரண்டு பேரிடமும் ஆளுக்கு ஒரு மாதம் என தன்னை ஒருவன் ஏலம் விடுகிறான் என்பதை அறிந்ததும் ஒரு பெண்ணுக்கு கோபம் வர வேண்டாமா? சாதி, வர்க்கம், ஆண்&பெண் பேதம் எல்லாம் பிறகு. முதலில் சுயமரியாதையுடன், ‘என்னை ஏலம் விட நீ யாருடா நாயே?’ என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? ஆனால் கதையின் நாயகியோ, தன்னை ஏலம் விட்டது தெரிந்த பிறகும் சசிக்குமார் மீது கோபப்படவில்லை. மாறாக அவரையே காதலிக்கிறார். காரணம், மூவரில் சசிகுமார்தான் பணக்காரர் என்பதாலா? சுயமரியாதை இழிவுபடுத்தப்படுவதை ஏற்கும் இந்த பெண்தான் நாயகி. செய்பவன் நாயகன்.
“யார் மீது காதல் வரும் என்று எப்படி சொல்ல முடியும்?”’ என்று கேட்கலாம். எனில் மற்ற இருவரையும் நிராகரித்துவிட்டு, சசிகுமாரை ஓ.கே. செய்வதற்கு கதைப்படி எந்த தர்க்க நியாயமும் இல்லையே?! அதுபோலவே, தனக்கு யார் மீது காதல் இருக்கிறது என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும். சசிகுமாரோ, தனது நண்பர்களில் ஒருவரை காதலிக்குமாறு கட்டாயப்படுத்துகிறார். “பயலுகளை பின்னாடி சுத்த விடுறதுல உங்களுக்கு ஒரு சந்தோஷம்”’ என்ற தொனியில் கதாநாயகியை பார்த்து சசிகுமார் பேசும் வசனத்தை வேறு பல படங்களிலும் கேட்டிருக்கிறோம். ஆனால் கதாநாயகன்தான் வேலை வெட்டி இல்லாமல் எல்லா படங்களிலும் பல பெண்களின் பின்னால்தான் சுற்றுகிறான்.
பொறுக்கித்தனத்தை ஹீரோயிசமாக முன்னிருத்தும் தமிழ் சினிமா ஃபாமுலாவில் இருந்து துளியும் மாறாமல் இருக்கிறது சசிகுமாரின் பாத்திரம். நாம் அனைவரும் வேலைபார்த்துதான் வாழ்கிறோம். சுந்தரபாண்டியன் படத்தை பார்க்கும் ரசிகர்களும் ஏதோ ஒரு வேலை பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் படத்தின் கதாநாயகனுக்கோ எந்த வேலைவெட்டியும் இல்லை. எந்த வேலையுமே இல்லாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்? இருக்கிறான். நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவருக்கு மட்டுமில்லை… சசிகுமாரின் நண்பர்களுக்கும் வேலை இல்லை. அவர்கள் வேலை பார்ப்பது போல் ஒரு காட்சி கூட இல்லை. அவர்களின் வேலை எல்லாம் டீக்கடையில் அமர்ந்துகொண்டு பெண்களை கிண்டல் செய்வது, பேருந்தில் வரும் பெண்களை சைட் அடிப்பது, காதலில் கஷ்டப்படும் நண்பர்களுக்கு உதவுவது… இவைதான்.
இதில் அப்புக்குட்டியின் கதாபாத்திரம் தோற்றத்தை வைத்து மோசமாக கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. குட்டையான, குண்டான, கருப்பான அப்புக்குட்டி மாதிரியான ஆண்கள், அழகிய’ பெண்களை கனவில் கூட நினைத்துப் பார்ப்பது தப்பு என்கிறார் இயக்குநர். இங்கும் இயக்குநருக்கு கை கொடுப்பது முந்தைய ‘எம்.ஜி.ஆர் உதாரணம்’தான். “அழகற்ற அசிங்கமான ஆண்கள் அழகான பெண்களை விரும்புவது கிண்டலுக்குரியது”’ என்பது ஏற்கெனவே ரசிக மனதில் பதிந்திருப்பதால் இயக்குநர் அதை பயன்படுத்தி அந்த கிண்டலை வில்லத்தனமாக மாற்றுகிறார். இதனால் அப்பு குட்டி போன்ற தோற்றத்தில் ‘அழகில்லாதவர்கள்’ குரூர குணம் கொண்டவர்களாக இப்படம் உணர்த்துகிறது. ஆனால் தான் காதலிக்கும் பெண்ணுக்காய் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடும் அப்புக்குட்டி வில்லன் என்றால் ஒரு காலத்தில் காதலித்த பெண்ணை மற்ற இருவரிடமும் ஏலம் விடும் சசிகுமார் யார்?
சுந்தரபாண்டியன்-2அக்காவையும், தங்கையையும் ஒருசேர திருமணம் செய்துகொண்டவர் சசிகுமாரின் அப்பா. வழக்கொழிந்து போய்விட்ட இருதார மணம் எந்த விமர்சனமுமின்றி அழகியல் அம்சமாக காட்டப்படுகின்றது. கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இந்த காட்சி எதற்கென தெரியவில்லை. ஒருவேளை ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கிண்டல் செய்து திரியும் சசிகுமாரின் பாத்திரத்தை நியாயப்படுத்த அப்பாவையும் அதேபோல மைனர் குஞ்சுவாக அமைத்திருக்கிறார்களோ என்னவோ…  ஆனால் இந்த மைனர் குஞ்சுகள் படத்தில் நெஞ்சு நிமிர்த்திய கனவான்களாக வரும்போதுதான் சகிக்க முடியவில்லை.
சசிகுமார் பாத்திரம் திருமணம் ஆன, ஆகாத முறைப் பெண்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்கிறது. இப்படிப்பட்ட காட்சிகளை இப்போதும் நாம் கிராமங்களில் காணலாம். ஆனால் அந்த முறைப்பையன்கள் யாரும் அந்த முறைப்பெண்களை திருமணம் செய்துகொள்வது இல்லை. கிண்டல் செய்வதற்கு மட்டும் அவர்கள்.. திருமணம் செய்துகொள்ள தங்கள் வசதிக்கு ஏற்ற வேறு பெண்கள்… என காரியவாதமாக பிரித்துக் கொள்கிறார்கள். சுந்தரபாண்டியனிலும் அப்படித்தான். ‘மாமா, மாமா’ என்று சசிகுமாரையே சுற்றி வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணை கிண்டல் செய்யும் எல்லையில் நிறுத்தி வைக்கும் சசிகுமார், தன் சொந்த சாதியில், தனக்கு இணையான வசதியில் உள்ள பெண்ணையே திருமணத்துக்கு தேர்ந்தெடுக்கிறார்.
எந்த விழுமியங்களுமற்ற நட்பு, காரியவாதமான காதல், பெண்களை அசிங்கப்படுத்தும் பாத்திரப் படைப்பு, தோற்றத்தை வைத்து கீழ்மைப்படுத்தும் வக்கிரம், சாதித் திமிர் என அனைத்து வகையான பிற்போக்குத்தனங்களையும் சிறு விமர்சனமும் இல்லாமல் நேர்மறையில் அணுகும் இந்தப் படத்தை சிலர் பயங்கர ஜாலியான படம் என்கிறார்கள். வலையுலகிலும், சமூக வலைதளங்களிலும் குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி பரிந்துரைக்கின்றனர்.
அவர்களிடம்…. இதே கதையை இப்படி எடுக்க முடியுமா என்று பாருங்களேன்… ‘இதுதான் பரமக்குடி…’ என்று வாய்ஸ் ஓவர் துவங்குகிறது. இமானுவேல் சேகரன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. தேவர் படம் போட்ட போஸ்டர் ஒட்ட வரும் இளைஞர்களை ‘ஏம்பா.. யாருப்பா இங்கே போஸ்டர் ஒட்டுறது.. எங்க ஆளுக மட்டும்தான் ஒட்டனும்’ என்று ஒரு பெரியவர் விரட்டிவிடுகிறார். படம் நெடுக காட்டப்படும் தேவர் குறியீடுகளுக்கு மாற்றாக அம்பேத்கர், இமானுவேல் சேகரன் படங்கள் காட்டப்படுகின்றன. ஒரு பெண், திருமணம் ஆன/ஆகாத தன் முறை பையன்களை எல்லாம் கிண்டல் செய்கிறாள். சாத்தியமா இவை எல்லாம்? கிரியேட்டரின்’ மூளையே இந்த சிந்தனையை சுய தணிக்கை செய்துவிடும். அதை மீறி வெளியே வந்தால் தணிக்கைத்துறை தாளித்துவிடும்.
உசிலம்பட்டி பற்றி வரும் துவக்கக்காட்சியை அப்படியே கத்தரித்துவிட்டாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அந்தக் காட்சியை வலுக்கட்டாயமாக திணித்து, “இது அசல் தேவர் சினிமா”’ என்று உணர்த்தி, குறைந்தப்பட்ச சந்தையை பிடிக்கிறார்கள். ஆகவே சுந்தரபாண்டியன் மற்றுமொரு குடும்பப்படம் அல்ல. இது ஒரு திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஆபத்தான அழுக்கான சினிமா! மதுரை வழக்கில் மயங்கியவர்கள் அந்த அழுக்கின் வீச்சை உணரவேண்டும்.

1 கருத்து:

  1. குலத்தொழில் திருடுவது ,வழிப்பறிசெய்வது,பிறர் சொத்துக்களை கொல்லையாடிப்பது,பரம்பரையே குற்றப்பின்னணி கொண்ட இழிவானதொளில் செய்பவர்கள் அதிலிருந்து மீண்டு வீரப் பரம்பரை என்று காட்ட முயற்சிக்குறான்கள். மள்ளர்கள் ஏன் மௌனமாக உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு