செவ்வாய், 20 நவம்பர், 2012

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தலித்துகளுக்கு வழங்கப்படும் 18 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து அருந்ததியர்களுக்கு 2009-ம் ஆண்டு முதல் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராஜசேகர் சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் என். வரதராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி. சம்பத் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், தீர்ப்பு வரும்வரை உள் ஒதுக்கீடு தொடரும் என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி. சம்பத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் உள் ஒதுக்கீட்டுக்கு தடை கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பஞ்சாப் மாநில உள் ஒதுக்கீட்டு வழக்கில் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
எனவே, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஜி. ராமகிருஷ்ணன், பி. சம்பத் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்குரைஞர்கள் எம். கிறிஸ்டோபர், பெனோ பென்சிகர் ஆகியோர் ஆஜராக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக