வியாழன், 20 டிசம்பர், 2012

குவாரியில் மோதல்: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. உட்பட 32 பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே ஒரு கல் குவாரியில் ஏற்பட்ட மோதலில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 32 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ளது ஓட்டப்பிடாரம். இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் வெள்ளாரம் என்ற கிராமத்தில் கல்குவாரி ஒன்றை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மோகனின் உறவினர் வீரபெருமாள் என்பவர் அரசு அனுமதியுடன் நடத்தி வருகிறார். இங்கு முறைகேடுகள் நடப்பதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி தனது ஆதரவாளர்கள் 7 பேருடன் கல்குவாரியை ஆய்வு செய்ய சென்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வீரபெருமாள் முன்னாள் எம்.எல்.ஏ. மோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மோகன் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். இதில், வீரபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., அவரது ஆதரவாளர் பட்டவராயன், கண்ணப்பன், சுப்ரமணியன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதே போல, கிருஷ்ணசாமி தரப்பைச் சேர்ந்த பட்டவராயன் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், வீரபெருமாள் உட்பட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மேலும் கலவரம் வெடிக்குமோ என பொது மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக