வியாழன், 10 ஜனவரி, 2013

பசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் : தூத்துக்குடியில் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் அஞ்சலி




பசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி அலங்காரதட்டு கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டு முன் ஒரு கும்பலால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அருகே அலங்காரதட்டு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

பசுபதி பாண்டியனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை யொட்டி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் எஸ்விஐ முன்பிருந்து தூத்துக்குடி நகரம் வழியாக மேல அலங்காரதட்டு கிராமத்திற்கு நினைவு ஜோதி ஓட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு போலீசாரிடம் அனுமதி கோரி இருந்தனர். ஆனால் போலீசார் அனுமதியளிக்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து மேல அலங்காரதட்டு கிராமத்தில் பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் அமைதியான முறையில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் பசுபதிபாண்டியன் குடும்பத்தினர், உறவினர்கள், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.

பசுபதிபாண்டியன் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இன்று நடந்த நிகழ்ச்சியில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, தமிழ்நாட்டில் தேவேந்திரகுல வேளாளர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா கொலம்பியா பல்கழகத்தைச் சேர்ந்த மாணவி விக்டோரியா கலந்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.முருகவேல்ராஜன் வந்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக