வியாழன், 7 பிப்ரவரி, 2013

நாடாளுமன்றத் தேர்தல்: எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்திய கம்யூனிஸ்டா? டாக்டர் கிருஷ்ணசாமியா? l

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுமே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. சமீபத்தில் இக் கூட்டணியை விட்டு புதிய தமிழகம் வெளியேறியது. அடுத்த தேர்தலில் தனித்தே போட்டி என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துவிட்டாலும் கூட்டணியை தொங்கிக் கொண்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். இந் நிலையில் இன்று சட்டசபையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ குணசேகரன் கூறுரையில், சில்லறை வர்த்தகம், தகாவிரிப் பிரச்சனை உள்பட அனைத்து விவகாரங்களிலும் மக்கள் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றார். பின்னர் தனது பேச்சை நிறைவு செய்கையில், சனி பிணம் தனியாகப் போகாது என்பதைப் போல காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு விரைவில் சனி பிணமாகச் செல்ல இருக்கிறது. அவர்களோடு சேர்ந்து சில கட்சிகளும் போக உள்ளன. டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த கிருஷ்ணசாமி, நாங்கள் எப்போதும் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறோம். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தான் மாறிமாறி வேறு வேறு அணிகளுக்குப் போகிறீர்ர்கள். நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். இதையடுத்துப் பேசிய குணசேகரன், ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோதுதான் கம்யூனிஸ்ட்டுகள் அந்த அணியில் இடம் பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்தோமே தவிர, மற்ற எதிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது இல்லை என்றார். இன்னொரு இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஆறுமுகம் பேசுகையில், தேசிய மாநாடுகளில் ஆய்வு செய்த பிறகே அனைத்து முடிவுகளையும் இடதுசாரிகள் எடுக்கின்றனர். குணசேகரன் தேர்தல் தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணசாமி ஏன் அப்படி எடுத்துக் கொள்கிறார் எனத் தெரியவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக