வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பாஞ்சாலங்குறிச்சி வீரன் சுந்தரலிங்கம்




வீரன் சுந்தரலிங்கம்

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கரைத் தெரியுமா? ஓகோ! வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னால்தான் தெரியுமா. சரி. இந்தப் பெயரை சிலம்புச் செல்வர் அளித்தது. பாஞ்சாலாங்குறிச்சியின் பாளையக்காரர் பெயர் கட்டபொம்மு நாயக்கர் தான். இவருடைய தம்பி ஊமைத்துரை. இவ்விருவரும் மாபெரும் வீரர்கள். இவருக்கு ஒரு அமைச்சர் இருந்தார், அவர் பெயர் தானபதி பிள்ளை. இப்படிப்பட்ட தன்மானம் மிக்க ஒரு பாளையக்காரரிடம் அமைந்த தளபதிகள் எப்படி இருந்திருப்பார்கள். வெள்ளையத் தேவன் என்று ஒரு மாவீரன். சுந்தரலிங்கம் என்று மற்றொரு சூரன். இப்படிப்பட்ட வீரசிகாமணிகளைத் தன்னுடன் வைத்திருந்த கட்டபொம்மு நாயக்கர் வெள்ளையனை எதிர்த்து வீரமுழக்கம் செய்ததில் என்ன வியப்பு?

இந்த தளபதிகளில் சுந்தரலிங்கம் பற்றி சிறிது பார்ப்போம். இந்த சுந்தரலிங்கத்தின் முழுப்பெயர் என்ன தெரியுமா? கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்கம் என்பது அவன் முழுப் பெயர். சுந்தரலிங்கக் குடும்பனார் என்றும் அழைப்பது உண்டு. கட்டபொம்மு நாயக்கரின் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகிலுள்ள வெள்ளைவாரணம் எனும் கிராமத்தில் பிறந்தவர் இவர். 

கட்டபொம்மு நாயக்கர் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டையைக் கட்டி, படை, குடிகளுடன் கம்பளத்தார் ஆட்சியை நிறுவிய காலத்தில் பலதரப்பட்ட வேலைகளுக்கு ஆட்களை நியமித்தார். அப்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளைக் கொண்டு சேர்க்கும் பணிக்கு நம்பகமான ஆட்களை நியமனம் செய்தார்கள். அப்படிப்பட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரண வீரனாகத்தான் சுந்தரலிங்கம் ஆரம்பத்தில் பணியைத் தொடங்கினார். 

கட்டபொம்மு நாயக்கரின் படையில் பல தரப்பட்ட பிரிவினர்களும் வீரர்களாகச் சேர்ந்தனர். அப்படிப் பட்ட வீரர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் இருந்தார்கள். அப்படிப்பட்ட வீரர்களில் சுந்தரலிங்கமும் ஒருவர். இவர் தன்னுடைய நேர்மையான உழைப்பு, வீரம், ராஜ விசுவாசம் இவற்றால் பாளையக் காரர்களின் பார்வையில் மிக உயர்வாகக் காட்சியளித்தார். இவருடைய நேர்மையான உழைப்பையும், வீரத்தையும் பலமுறை பாராட்டிய கட்டபொம்மு நாயக்கர் இவரைப் படைத் தளபதியாக பதவி உயர்த்தி கெளரவித்தார்.

ஏற்கனவே கட்டபொம்மு நாயக்கரிடம் வெள்ளையத்தேவன் எனும் துடிப்பான வீரம் மிகுந்த தளபதி ஒருவர் இருந்தார். அவருக்கு நிகராக சுந்தரலிங்கமும் வீரத் தளபதியாக விளங்கினார். 

ஒரு முறை ஆங்கில கும்பினியாரின் படைகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டுவிட்டது. தளபதி வெள்ளையத்தேவன் அப்போது கோட்டையில் இல்லை. ஆகவே அவனை அழைத்துவரும்படி கட்டபொம்மன் சுந்தரலிங்கத்தை அனுப்பி வைத்தார். சுந்தரலிங்கம் வெள்ளையத் தேவனின் வீட்டை அடைகிறார். தளபதி வெள்ளையத் தேவன் மிகுந்த கோபக்காரன். தூக்கத்தில் இருக்கையில் யாராவது எழுப்பிவிட்டால் தாக்கிவிடும் குணமுடையவன். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக சுந்தரலிங்கம் வெள்ளையத் தேவனை எழுப்புகிறார். பின்னர் தளபதியிடம் எல்லா விவரங்களையும் சொல்லி, வெள்ளையர்கள் கோட்டையைச் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையை எடுத்துரைக்கிறார். உடனே இருவரும் அங்கிருந்து கிளம்பி கோட்டைக்குள் சென்று கட்டபொம்முவைச் சந்திக்கிறார்கள். 

கட்டபொம்மன் இவ்விரு தளபதிகளிடமும் தன் படைகளைக் கொடுத்து போர்க்களம் செல்லும்படி பணிக்கிறார். கோட்டைக்கு வெளியே உக்கிரமான போர் நடந்தது. அந்தப் போரில் வெள்ளையத் தேவன் வீரமரணம் அடைந்து விடுகிறான். எஞ்சியப் படைகளைக் கொண்டு சுந்தரலிங்கம் வேறு சில படைத் தளபதிகளான ஆதிவீரமல்லு சேர்வை, கந்தன்பகடை, கண்டகோடாலி என்பவர்களைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு ஆங்கிலேயர்களோடு மோதுகிறார். எட்டத்தில் கூடாரமடித்துத் தங்கியிருந்த வெள்ளையர்களின் முகாமைத் தாக்கி அங்கு காவல் இருந்த சிப்பாயைச் சுந்தரலிங்கம் குத்திக் கொன்றுவிடுகிறார். இந்தப் போரில் கந்தன்பகடை எனும் தளபதி கட்டபொம்மு பக்கத்தில் வீரமரணம் அடைந்து விடுகிறார். 

கோட்டைக்கு வெளியே முற்றுகை இட்டிருந்த வெள்ளைப் படைகளுக்கிடையே சுந்தரலிங்கமும், வீரமல்லு சேர்வையும் மாட்டிக் கொள்கிறார்கள். யுத்தகளம் முழுவதும் இரண்டு பக்கத்து வீரர்களின் இறந்த உடல்கள் வீழ்ந்து கிடக்கின்றன. மாட்டிக் கொண்ட சுந்தரலிங்கம் ஒரு தந்திரம் செய்தார். பிணத்தோடு பிணமாகக் கீழே விழுந்து புரண்டு சென்று செத்துக் கிடந்த வெள்ளைக்காரச் சிப்பாயின் உடையை எடுத்து மாட்டிக் கொண்டு அவர்களது துப்பாக்கியையும் பிடுங்கிக் கொண்டு, யுத்த களத்திலிருந்து இவ்விரு தளபதிகளும் தப்பி ஓடி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை அடைந்து விடுகிறார்கள்.

போர்க்களத்தில் நடந்த விவரங்களைச் சுந்தரலிங்கம் கட்டபொம்மு நாயக்கருக்கு எடுத்துச் சொன்னார். இவ்விரு தளபதிகளைன் சாகசங்களைப் பாராட்டி கட்டபொம்மு இவ்விருவருக்கும் பத்து வராகனில் தங்கப் பதக்கமும், முத்துக்கள் பதித்தக் கடுக்கன், அடுக்கு முத்து மோகன மாலை, ஹஸ்த கடகங்கள், முன்கை மூதாரிகள் என பலவகைப்பட்ட ஆபரணங்களைப் பரிசளித்து கெளரவித்தார். 

பாளையக்காரர் மட்டும் மாவீரனாக இருந்துவிட்டால் போதுமா, அவனுக்கு அமைந்த தளபதிகளும் அவனைப் போலவே வீரர்களாக இருக்க வேண்டாமா? அப்படி அமைந்ததால்தான் இன்றும் வீரபாண்டியன் கட்டபொம்மு நாயக்கர் என்று பலரும் வியந்து போற்றி பாராட்டுகிறார்கள். அந்தப் புகழுக்கெல்லாம் சுந்தரலிங்கம் போன்ற தளபதிகள்தான் காரணம் என்பதை நாம் மறக்கலாமா?

பின்னர் 1799ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி, வெள்ளைக்காரப் படைகளோடு வீரபாண்டியன் கட்டபொம்மன் நடத்திய இறுதிப் போரில் இந்த மாவீரன் சுந்தரலிங்கம் வீரமரணம் எய்தினார் என்பது வரலாறு. வாழ்க வீரன் சுந்தரலிங்கம் புகழ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக