வெள்ளி, 21 ஜூன், 2013

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தி தி.மு.க. துரோகம் செய்துவிட்டது: டாக்டர் கிருஷ்ணசாமி


கடந்த முறை ஆட்சி செய்த தி.மு.க. அரசு 76 சாதிகளில், 70 சாதிகளுக்கு விரோதமாக 3 சதவீத அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி துரோகம் செய்துவிட்டது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் அவர் கூறியதாவது:
பல முறை தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளால் வெற்றி பெற்ற தி.மு.க. தனது ஆட்சி காலத்தின் இறுதிகட்டத்தில் ஒரு நபர் கமிஷனைப் போட்டு ஏமாற்றி சென்று விட்டது. 76 சாதிகளில் 70 சாதிகளுக்கு விரோதமாக அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை தி.மு.க. அரசு அமலாக்கியது. இதன் காரணமாக 76 சாதிகளுக்கான முதல் வாய்ப்பை அருந்ததியர் என்னும் ஒரு சாதி மட்டுமே அபகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தி.மு.க. செய்த துரோகம். இதன் விளைவாக அடுத்த 30 அல்லது 40 வருடங்களுக்கு எந்த உயர் பதவிகளிலும் தேவேந்திர குல வேளாளர் போட்டியிட முடியாத சூழ்நிலை உள்ளது. இது சமூக நீதிக்குப் புறம்பானது.
2011 பொதுத் தேர்தல் மற்றும் 2012 சங்கரன்கோவில் இடைத் தேர்தலின் போது அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தயங்குகிறது.ஆதிதிராவிடர் என்பது பட்டியலில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்கும். ஆனால் 76 சாதிகளை உள்ளடக்கிய ஒட்டு மொத்த பட்டியலின மக்களை, ஆதிதிராவிடர் என்ற ஒரு பெயரில் அழைப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. தேவேந்திர குல வேளாளர் என அரசாணைப் பிறப்பிக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
உண்ணாவிரத்திற்கு போக்குவரத்து சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் எஸ்.டி.கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.ராமராஜ் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். உண்ணாவிரத்ததில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் டி.லட்சுமி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக