வெள்ளி, 21 ஜூன், 2013

ராஜ்யசபா தேர்தல்.. திமுகவுக்கு 'அதிமுகவின்' புதிய தமிழகமும் ஆதரவு ...

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக அணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் 27-ந் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக அணியின் 5 எம்.பிக்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் வேட்பாளராக கனிமொழியும் தேமுதிகவின் வேட்பாளராக இளங்கோவனும் மோதுகின்றனர். ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. திமுகவுக்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர். 2 உறுப்பினர்களை கொண்ட மனிதநேய மக்கள் மக்கள் கட்சி நேற்று தனது ஆதரவை திமுகவுக்கு வழங்குவதாக அறிவித்துவிட்டது. இதனால் 25 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியானது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று நண்பகல் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு புதிய தமிழகம் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிப்பதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா தேர்தலில் அதிமுக, இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போதிய வாக்குகள் உள்ளதாக தெரிவித்தார். எனவே வாக்குகளை வீணாக்காமல் திமுகவிற்கு அளிக்க உள்ளதாக கூறினார். புதிய தமிழகம் கட்சியும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் இடம்பெற்றிருந்தது. தற்போது ராஜ்யசபா தேர்தலில் திமுகவை ஆதரிக்க முன்வந்துள்ளது. லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே புதிய தமிழகம் ஆதரவு அளிக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, திமுக அணியில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. ஆதரவு நிலை ராஜ்யசபா தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு புதிய தமிழகம் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவையும் சேர்த்து மொத்தம் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. தேமுதிக வேட்பாளருக்கு அக்கட்சியின் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி மற்றும் 3 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் யாருக்கு ஆதரவு என்பதைத் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவை திமுகவும் தேமுதிகவும், பாட்டாளி மகள் கட்சியின் ஆதரவை திமுகவும் கோரியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக