செவ்வாய், 25 ஜூன், 2013

ஆட்சியில் பங்கு கொண்டால்தான் கூட்டணி; நாங்கள் தொகுதி உடன்பாடே செய்திருந்தோம்: டாக்டர் கிருஷ்ணசாமி


ஆட்சியில் பங்கு கொண்டிருந்தால்தால் கூட்டணி என்பதாகும்; நாங்கள் வெறுமனே தொகுதி உடன்பாடுதானே கொண்டிருந்தோம் என்றார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
இன்று திருச்சிக்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு தொடர்பாக வரும் அக்டோபர் 2ல் ஒரு மக்கள் இயக்கம் தொடங்கப்படும். அது குறித்த இதர தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
அப்போது, திமுகவுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் வழங்கப்படும் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
ஐந்து முறை முதல்வராக இருந்த மூத்த அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதரவு கேட்டார். எனவேதான் திமுக.வை  ஆதரிக்கும் முடிவுக்கு வந்தோம். மேலும், அதிமுக, கம்யூ. உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்த வேட்பாளர் வென்றுவிடுவார் என்பதால், எங்கள் வாக்குகள் வீணாகக் கூடாது என்று முடிவு செய்தோம். மேலும் அவர்களுக்கு வெற்றிக்குத் தேவையான வாக்குகளைக் காட்டிலும் அதிகம் உள்ளதால், எங்கள் வாக்குகள் வீணாகாமல் இருக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம். கனிமொழி எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்றார் அவர்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று, இப்போது எதிர்த் தரப்புக்கு ஆதரவு தருவது நியாயமானதா என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு அவர், ஆட்சியில் பங்கு கொண்டால்தான் கூட்டணி என்பது சரியாகும். நாங்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை. மேலும், நாங்கள் வைத்தது கூட்டணி அல்ல, தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்களே... என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக