திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பள்ளர்/மள்ளர் என்பது சாதியா? இனமா?


'தமிழன் உலகாண்டான்' என்பதற்கு அடிப்படையாய் காட்டப்பட்ட பல இடங்களில் 'பள்ளர்/மள்ளர்' என்றே அடையாளங்கள் அதிகமாய் இருந்ததை சுட்டி காட்டி இருந்தோம். அதில் சில நண்பர்களுக்கு பிணக்கும், சாதி மேன்மை பாராட்டுவதாகவும் எண்ணி இருந்தார்கள். அவர்களுக்கான பதிவு இது.

இலக்கியம் கூறும் ஐந்து வகை நிலங்களும், மக்களும்
 
 



இலக்கிய பார்வையில் மள்ளர்/பள்ளர்

*  'செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்'  -- பிங்கல நிகண்டு

* “"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்"” --- முக்கூடற் பள்ளு

* “நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்” --- கம்பராமாயணம்

எனவே இலக்கியங்கள் மருத நிலத்தில் வாழ்ந்த மக்களை குறிக்கவே மள்ளர் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுளதையும், அப்படி குறிக்கப்படும் மள்ளர்கள் ஒரு இனமாகவும்குலமாகவும் தான் காட்டப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கே முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்று பார்வையில் மருத நில குடிகள்
வேளாண்மையும், அது சார் தொழில்களும், இவற்றை நிர்வகிக்கும் அரசும், வணிகர்களும், அரசை வழி நடத்தும் அனைத்து மக்களுமே மருத நில குடிகளான மள்ளர்கள் ஆவார்கள். இதில் இருந்து 'பள்ளர்'(இன்றைய பள்ளர் சாதி மக்கள்)  மட்டுமே மள்ளரா என்ற கேள்வி அர்த்தமற்றதாகிறது. மேலும் அந்த மள்ளரின் பணி  வேளாண்மை மட்டுமே என்ற குறுகிய கண்ணோட்டமும் அடிபட்டு போகிறது.

அப்படி என்றால் இன்றைய 'பள்ளர்கள்'(சாதி)  மட்டும் தான் 'மள்ளரா',வேறு யாரும் இல்லையா என்ற கேள்வி இயல்பாக எழும். அதை தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அலசுவோம். உலகம் முழுக்கும் பள்ளர் என்ற சொல்லாடலும், மள்ளர் என்ற சொல்லாடலும், உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் ஆண்ட தமிழனின் அடையாளம் அனைத்திலும் 'பள்ளர்' என்ற வார்த்தையே அதிகம் பயன்படுத்த படுவதில் இருந்தும், அந்த பெருமைக்கு உரியவர்கள் பள்ளர்கள் மட்டுமா என்பதை தெளிவான பார்வையில் இனி காண்போம்.

உலகின் அனைத்து நாகரிகத்திலும் முதன்மையானது உழவு தொழிலே. அந்த உழவுத் தொழிலை ஒட்டியே மற்ற தொழில்களும், அரசும் தோன்றின. எனவே தான் உலகம் முழுதும் உழவு தொழிலை சிறப்பிக்கும் வகையிலும், தான் அந்த வேளாண் சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற வகையிலும், மற்ற தொழில்களை விடுத்து தன்னை ஒரு வேளாண் குடி சார்ந்தவனாக காட்டிக் கொள்ளவே தமிழன் விரும்பியுள்ளான். இதனாலேயே (ஆயர் என்ற ஒரு சில சொற்களை தவிர), கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் 'பள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான். இதன் மூலம் மருத நில மூத்த குடியினரை சிறப்பித்துள்ளான். இந்த அடையாளத்தை தான் இன்றைய 'பள்ளர்' சமூக மக்கள் தக்க வைத்து உள்ளனர். 

கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து பள்ளர் பிரிவையும் (இலக்கியம் சொல்லும் இன,குல மள்ளர்கள்) ஒருங்கே குறிக்கும் அர்த்தத்தில் தான் உலகில் விரவிக் கிடக்கும் பள்ளரையும், தமிழன் அடையாளத்தையும் பார்க்க வேண்டுமே தவிர, 'பள்ளர்' என்ற ஒற்றை சாதி அடையாளமாக அல்ல.

 

மரபணு அடிப்படையில் மருத நில குடிகள்
NOTE: இங்கே அனைவரையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை.
 

 

ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

தர்க்க அடிப்படையில் மருத நில மக்கள் இருப்பு:
உலகம் முழுவதிலும் தமிழன் தடத்தில் 'பள்ளர்' இருக்கிறார்கள் என்றால், அந்த இனம் இங்கே பெரும்பான்மையாக கோலோச்சி இருக்க வேண்டும். ஆனால் இன்று 'ஆறில் ஒரு பங்கு அளவு' மட்டுமே இருக்க கூடிய 'பள்ளர்' சமூகத்தால் அது சாத்தியமா? 

'கடலோடியான' தமிழன் ஒரு கப்பலை கட்டி இயக்கவே கீழ் கண்ட தொழில் சார் மக்கள் தேவைப்படுகிறார்கள்.

* பருத்தி உற்பத்தி
* பருத்தி நூற்ப்பு & பாய் மரம் செய்தல்
* மரம் இழைத்தல்
* கப்பலை கட்டும் நிபுணர்
* கப்பலில் செல்ல தேவையான உணவை தயார் செய்தல்
* வானியல் நிபுணர்
* கடலியல் நிபுணர்
* சிற்பி (சென்ற இடத்தில் எல்லாம் தமிழன் கோவில் கட்டியுள்ளான்)
* இரும்பு,செம்பு என கப்பல் கட்ட தேவையான கொல்லர்கள்
* கப்பல் மாலுமி
* கப்பலை செலுத்துபவர்கள்

கடலோடி தமிழன் என்ன தான் மேலே சொன்ன அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து பணி ஆற்றி இருந்தாலும், இவர்களின் ஒட்டு மொத்த அடையாளமாகத் தான் 'பள்ளர்/மள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான் என்பதையும், தான் சென்ற இடங்களுக்கெல்லாம் இள வட்டக்கல்லையும், நெல் கதிரையும் கொண்டு சென்று இறங்கியுள்ளான் என்பதையும் நாம் வரலாறின் மூலம் அறிகிறோம். எனவே 'பள்ளர்/மள்ளர்' என்பது ஒரு திணையில் (அ) திணை மயக்கத்தில், வாழ்ந்த, ஒரு இன மக்களை குறிக்கும் வார்த்தை என்பதையும், மருத நிலத்தில் வாழும் அனைத்து தொழில் சார் மக்களையுமே அது சுட்டும் என்பதையும் அறியலாம். மேலும், மூவேந்தர்கள் சுட்டி காட்டும் 'பள்ளர்' உட்பட, இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கும் 'பள்ளர்' சாதி ஆட்கள் அனைவரும் மருந்த நில வேளாண் சார் தலை குடி மக்கள் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

மக்கள் குடிக்கணக்கில் மாற்றம்
பாண்டிச்சேரி(1970-72) உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளர் என்று வாழ்ந்து வந்த மக்கள் பலர், தற்போது வன்னியர் என்றும், நாடார் என்றும், கொங்கு வேளாளர் என்றும் வாழ்ந்து வருகின்றனர் (கள ஆய்வு தகவல்: ஒரிசா பாலு) என்பதும், 'SC என்றால் எல்லாரும் ஒன்று தானே' என்று பறையர் என்று சான்றிதழ் பெற்று பள்ளர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் கள ஆய்வில் தெரிய வரும் உண்மை ஆகும்.

எனவே 'உலகில் இருக்கும் பள்ளர்' என்பதை சாதியம் என்று கொள்ளாமல், இனத்தின் அடையாளமாக கொள்ளவும். அந்த பெருமைகளில்,தொழில் சார் நுட்பங்களில், மேலே சொல்லப்பட்ட அனைத்து மருத நில மக்களுக்கும் பங்கு உண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளவும்.

-- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம், சென்னை --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக