வெள்ளி, 22 நவம்பர், 2013

ஏற்காடு தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்து ஜான் பாண்டியன் பிரசாரம்!


திருச்சி: ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் திருச்சியில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வை ஆதரிப்போமோ என்பதை இப்போது சொல்ல முடியாது.

தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்தது தவறு. அதனை இடித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடியில் காவல் துறையினரால் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது பற்றி விசாரணை நடத்துவதற்காக நீதிபதி சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் காவல் துறையை பாராட்டியும், இன்னொரு இடத்தில் காவல் துறையை கண்டித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், சம்பத் கமிஷன் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். உச்ச நீதிமன்றத்திலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி சார்பில் மாவட்டம் தோறும் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி மாநாடு நடத்தப்பட உள்ளது" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக