செவ்வாய், 25 மார்ச், 2014

தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியின் வெற்றிக்கு பாடுபடுவோம் தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் பேச்சு..


கடையநல்லூர்,
தென்காசி பாராளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் செய்யது முகம்மது தலைமை தாங்கினார். நகர செயலாளர் முகம்மது அலி வரவேற்றார். தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன், தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, மைதீன்கான் எம்.எல்.ஏ., தங்கவேலு எம்.பி. ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது:–
வெற்றிக்கு பாடுபட வேண்டும்
ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணசாமி பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குரல் எழுப்பியவர். தி.மு.க. தலைவர் கருணாநிதி 5 பிரதமர்களை அடையாளம் கட்டியவர். நம்பியவர்களுக்கு கைவிடாத இயக்கம் தி.மு.க. ஆகும். தென்காசி பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணசாமியை வெற்றி பெறச் செய்தால் சமூக நல்லிணக்கம் ஏற்படும். எனவே ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் பேசினார்.
பல்வேறு திட்டங்கள்...
வேட்பாளர் கிருஷ்ணசாமி பேசுகையில், புதிய தமிழகம் கட்சி தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைய மனித சங்கிலி போராட்டம் நடத்தியது. என்னை வெற்றி பெறச் செய்தால், தென்காசி தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவேன். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு செயல்வீரர்கள் பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், வி.கே.பி. சங்கர், மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, ஒன்றிய செயலாளர்கள் துரை, பரமசிவன், ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி
புளியங்குடி கண்ணா திரையரங்கில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார். நகர தி.மு.க. செயலாளர் செல்வக்குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், கருப்பசாமி பாண்டியன் பேசுகையில், நாம் போர்க்கால வேகத்தோடு பணியாற்ற வேண்டும். நமது வேட்பாளரின் வெற்றியை நோக்கி நமது தேர்தல் பிரசார பயணம் அமைய வேண்டும். நமது வேட்பாளர் மக்களுக்காக போராடக்கூடிய குணம் படைத்தவர். டாக்டர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு ஏராளமான நன்மைகள் செய்வார். அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் காதர்மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் துரையரசன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் இன்பராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், முத்தையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக