வெள்ளி, 4 ஏப்ரல், 2014

தென்காசி தொகுதிக்கு கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் ..

தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
மனைவி, மகன் மற்றும் தனது பெயரில் மொத்தம் ரூ.16.65 கோடிக்கு சொத்து உள்ளதாகக் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அவர் வந்தார். மாவட்ட வருவாய் அலுவலரும், தென்காசி தொகுதி தேர்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரியிடம் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சொத்து மதிப்பு: வேட்புமனுவுடன் தனது பெயரிலும், மனைவி, மகன் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை உறுதிமொழிப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். கையிருப்பு, வங்கி இருப்பு, முதலீடு, நகைகள், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆகியவற்றோடு சேர்த்து தனது பெயரில் ரூ.31.39 லட்சம், மனைவி பெயரில் ரூ.90.22 லட்சம், மகன் பெயரில் ரூ.11.99 லட்சம் சொத்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வேளாண்மை நிலம், வேளாண்மை அல்லாத நிலம், கட்டடம், வீடுகள் என்ற வகையில் தனது பெயரில் ரூ.8.21 கோடி, மனைவி பெயரில் ரூ.5.38 கோடி, மகன் பெயரில் ரூ.1.72 கோடி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மொத்த மதிப்பு ரூ.16.65 கோடி.
வழக்கு விவரம்: பொது ஒழுங்கு சீர்குலைவு, சட்டவிரோதமாகக் கூடுதல், சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் தில்லி சாணக்கியபுரி காவல்நிலையத்தில் பதிவான வழக்கு விசாரணை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவை தவிர, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக கடம்பூர் காவல்நிலையத்தில் பதிவான வழக்கு விசாரணை, கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நாற்பதும் வெற்றி: வேட்புமனு தாக்கலுக்கு பிறகு கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்காசி உள்பட தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை முன்னுக்கு கொண்டுவரவும், தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வேளாண்மை ஆகியவற்றை மேம்படுத்தவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக