ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

பணம் பட்டுவாடாவுக்கு உடந்தை தேர்தல் ஆணையத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கிருஷ்ணசாமி பேட்டி...

நெல்லை: தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி  வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான கிருஷ்ணசாமி,  நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் தான்  பொறுப்பு. ஆனால், இந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் தேர்தல்  ஆணையத்தின் உதவியுடன் பட்டி தொட்டியெல்லாம் பணப்பட்டுவாடா  செய்தனர். இது 21ம் நூற்றாண்டில் நடந்த ஜனநாயக படுகொலை.  செக்போஸ்ட்கள் அமைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம்  வாகன சோதனை நடத்திய தேர்தல் ஆணையம், தேர்தலுக்கு ஒரு  வாரத்திற்கு முன் அனைத்து செக்போஸ்ட் களையும் அகற்றி விட்டது.  மேலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பணப் பட்டுவாடாவுக்கு  உடந்தையாக செயல்பட்டது. 

இதை நாங்கள் சும்மா விடமாட்டோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடருவோம். பணப் பட்டுவாடாவை வேடிக்கை பார்த்தது மிகப்பெரிய  தண்டனைக்குரிய குற்றம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக  தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து  பேசி முடிவு எடுப்போம். கட்சி சார்பின்றி அனைத்து கட்சி  தலைவர்களின் ஆதரவை கேட்போம். மேலும், தேர்தல்  ஆணையத்திற்கு எதிராக மக்களை திரட்டுவோம்.  144 தடை உத்தரவு  பிறப்பித்தது பணம் பட்டுவாடா செய்ததற்கு தான் என்பது  நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணப் பட்டுவாடா எங்களது வெற்றி  வாய்ப்பை பாதிக்காது. கூட்டணி பலம் வெற்றியை தேடி தரும்.   இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக