வெள்ளி, 25 ஜூலை, 2014

சட்டசபையில் இருந்து திமுக, புதிய தமிழகம் வெளிநடப்பு..


சட்டசபையில் இன்று மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) ஒரு பிரச்சனை குறித்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அது எனது ஆய்வில் உள்ளது என்றார்.
ஆனாலும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மு.க.ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கும்படி கேட்டனர். ஆனால் பேச அனுமதி கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:–
சட்டசபையில் ஒரு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்ட போது அனுமதி கிடைக்கவில்லை. 2 ஆங்கில பத்திரிகைகளில் வந்த புள்ளி விவரப்படி நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்து பேச இருந்தோம்.
அதில் தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை குற்றங்கள் 2013–ல் 7,475 என்றும், 2012–ம் ஆண்டில் 7,192 என்றும் தெரிவிக்கிறது. இதே போல கற்பழிப்பு சம்பவங்களின் புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2013–ம் ஆண்டில் 992 கற்பழிப்பு வழக்குகளும், 2012–ல் 737 சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முக்கியமான பிரச்சினை என்பதால் இது குறித்து பேச முற்பட்டோம்.
அது மட்டுமல்ல. நேற்று முன்தினம் போலீஸ் ஏட்டு ஒருவர் மணல் கடத்தலை தடுத்த போது டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். சமீபத்தில் மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது குறித்தும் பேச முடிவு செய்தோம்.
இது பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கேட்டு இருந்தோம். இது பற்றி பேச வாய்ப்பு கிடைக்காததால் வெளிநடப்பு செய்தோம்.
இதே போல் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
‘‘கடைசி நேரத்தில் நீங்கள் அனுமதி கேட்டால் எப்படி என்று சபாநாயகர் வினவினார். மற்ற கட்சி உறுப்பினர்கள் முன்பே எழுதி கொடுத்து அனுமதி கேட்டு இருந்தனர். நீங்கள் கடைசி நேரத்தில் தந்ததால் இப்போது பேச வாய்ப்பு இல்லை’’ என்றார்.
இதை தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக