புதன், 10 செப்டம்பர், 2014

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்......

தியாகி இம்மானுவேல் சேகரன் 57 வது நினைவு நாளை (செப்.11) முன்னிட்டு மதுரை வழியாக பரமக்குடி செல்லும் வாகனங்கள் செல்லும் வழிகளை காவல் துறை அறிவித்துள்ளது.
 இதுகுறித்து மதுரை மாவட்ட ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்திடச் செல்லும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட வாகனங்களும், விருதுநகர் பகுதியிலிருந்து வரும் வாகனங்களும் அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனூர் வழியாகச் செல்ல வேண்டும்.
  புதுக்கோட்டை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். அருப்புக்கோட்டை வழியில செல்லக் கூடாது.   அஞ்சலி செலுத்தச் செல்வோர் சொந்த வாகனங்களையே பயன்படுத்த வேண்டும். வாடகை வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. 
 அரசு வாகனங்கள்: செப்டம்பர் 11-ஆம் தேதி பரமக்குடி செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும், வழக்கமான வழித்தடமான மாட்டுத்தாவணி, சுற்றுச்சாலை சந்திப்பு, சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகவே செல்ல வேண்டும். ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள், அனைத்து சரக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் மதுரையிலிருந்து சிவகங்கை சுற்றுச்சாலை சந்திப்பு, கருப்பாயூரணி, வரிச்சியூர், பூவந்தி, சிவகங்கை, இளையான்குடி வழியாகச் செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 சோதனைச் சாவடிகள்: மதுரை நகருக்குள் நுழையும் சாலைகளில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் காமிரா மற்றும் கணினி மூலம் வாகன விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாகனத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சோதனை நடத்தப்படுகிறது. நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக