ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சி நிர்வாகிகள், அமைப்பினர் அஞ்சலி...


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 57-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.
முதலாவதாக, இமானுவேல் சேகரனின் மகள் ஜான்சி ராணி, பேத்தி ஹெலன், பேரன்கள் கோமகன், சந்திரசேகரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி ஆகியன எடுத்துவந்து அஞ்சலி செலுத்தினர். இளைஞர்கள் பலரும் நினைவிடத்தில் முடி காணிக்கை செலுத்தினர்.
இதையடுத்து, அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, காவல் துறை சார்பில், ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
5 மாவட்டங்களிலிருந்து 10 போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 56 நடமாடும் போலீஸ் ரோந்து வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வருவோருக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில் 2 டி.ஐ.ஜி.க்கள், 5 எஸ்.பி, 9 ஏடி.எஸ்.பி., 30 டி.எஸ்.பிக்கள் உள்பட மொத்தம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக