வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு!



அ.இ.அ.தி.மு.க வினர் நீதிபதிகளை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்!
1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்த காலத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சொத்து குவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அந்த வழக்கு கடந்த 18 ஆண்டு காலமாக 6 நீதிமன்றங்கள் 90 நீதிபதிகள் முன்பாக விசாரணை நடைபெற்று இறுதியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி தீர்ப்பும் கூறப்பட்டுவிட்டது.சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஜான் மைக்கேல் டி குன்ஹா அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும்,100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பும் கூறியுள்ளார்.இதே போன்று அவரது சகாக்களான சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இந்த தீர்ப்பை மறியல்,ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்களில் மேற்கொள்ளப்படும் காவல்துறை நடவடிக்கையைப் போன்று சித்தரித்து அ.இ.அ.தி.மு.க வினர் கடந்த 4 தினங்களாக நடத்திவரும் போராட்டங்கள் அனைத்து ஜனநாயக மாண்புகளையும் தவிடு பொடியாக்குபவையாக உள்ளன.
ஜனநாயகத்தில் நாடாளுமன்றம்-சட்டமன்றமும்,நிர்வாக அமைப்பும்,நீதித்துறை ஆகிய மூன்றும் பிரிக்க முடியாத அமைப்புகளாகும். இதில் எவை ஒன்று தாக்கப்பட்டாலும் அது ஜனநாயகம் ஊனப்படுத்தப்பட்டதாகவே கருதப்படவேண்டும்.அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுடைய கடைசி புகலிடமாக விளங்குவது நீதிமன்றங்களே! எனவே அதைக் கட்டிக் காப்பது என்பது அனைத்து குடிமகனுடைய கடமையாகும்.
ஆளுங்கட்சியினரே அரசுப் பேருந்துகளை கொளுத்துவது,பொது சொத்துக்களை சேதப்படுத்துவது,சாலை மறியல் செய்வது,உண்ணாவிரதம் மேற்கொள்வது, அந்த உண்ணாவிரதத்தில் தீர்ப்பளித்த நீதிபதி,மற்ற எதிர்க் கட்சி தலைவர்களை வசை பாடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நீதிபதியினுடை பெயரை சொல்லி அவருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டி கொச்சைப்படுத்துவது,உள்ளாட்சி மாமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது,நடிகர்-நடிகைகளை விட்டு உண்ணாவிரதம் இருக்க வைப்பது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையையேச் சாரும்.ஆனால் தமிழ்நாட்டிலுள்ள காவல்துறை மற்றும் பிற நிர்வாக அமைப்புகள் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டதே தவிர அந்த மாநில அரசுக்கும்,அம்மாநில மக்களுக்கும் எவ்விதமான தொடர்புமில்லை என்பதை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள எவரும் தெளிவுபடுத்தவில்லை.ஆனால், அ.இ.அ.தி.மு.க வினர் போராட்டங்களில் தேவையில்லாமல் இன்னொரு அண்டை மாநிலத்தோடு மோதல் போக்கை உருவாக்கி,ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே மேலோங்கி வருகின்றன.
ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இதே போன்று பல நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு மேல்முறையீடு செய்துள்ளார்.,இப்பொழுது தண்டனைப் பெற்றிருக்கக் கூடிய சொத்து குவிப்பு வழக்கிலும் உயர் மற்றும் உச்ச நீதிமன்ங்களை நாடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர நீதிபதியையோ, நீதிமன்றங்களையோ விமர்சிக்க அனுமதிப்பது எந்த விதத்திலும் பலனளிக்காது.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது நடைபெற்ற. முறைகேட்டின் விளைவாக போடப்பட்ட வழக்கு அதற்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்பதை அ.இ.அ.தி.மு.க வினரும், அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து தமிழத்திலுள்ள எதிர் கட்சிகள் மற்றும் தலைவர்கள், நீதிபதிகள் மீது குறை சொல்லுவது,விமர்சிப்பது,உருவ பொம்மைகளை எரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.உடனடியாக இது போன்ற ஜனநாயக விரோத செயல்களை தடுத்திட தமிழக காவல் துறையும்,நிர்வாக அமைப்பும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக