சனி, 29 நவம்பர், 2014

தென் மாவட்டங்களில் சாதி மோதலை தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..

தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் பா. ராஜ்குமார் தலைமை வகித்துப் பேசியது:
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 2 மாவட்டங்களிலும் 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த 14 பேருமே தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களே. இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. வன்கொடுமையால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொலைகளுக்கு அரசு உரிய நிவாரணத்தை முழுமையாக வழங்கவில்லை.
கொலைச் சம்பவத்தோடு நிற்காமல் வீடுகளைச் சேதப்படுத்துதல், பயிர்களைச்  சேதப்படுத்துதல் எனப் பொருளாதார இழப்புக்கும் ஆளாகியுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலான இந்த சம்பவங்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை.
தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய மோதல்களைத் தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். சமுதாயத் தலைவர்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை  நடத்துவதுடன் தொடர்ந்து மோதல்கள் ஏற்படாத வகையில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
மாநிலப் பொருளாளர் பொன். ராஜேந்திரன், மாநகரச் செயலர் வண்ணை முருகன், மாவட்டச் செயலர் யாக்கோபு மற்றும் மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பேசினர். கொலையானவர்கள் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக