திங்கள், 24 நவம்பர், 2014

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி திண்ணைப் பிரசாரம்: புதிய தமிழகம் கட்சி முடிவு..

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனர்-தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
தீர்மானங்கள்: 1989ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்துகொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப் பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது.
வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரியாக ஒரு சிறப்பு வழக்குரைஞர் குழு அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக