புதன், 25 பிப்ரவரி, 2015

ஸ்ரீவை. புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து 4–வது நாளாக போராட்டம்..

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் (வயது 28). கடந்த 22–ந்தேதி இரவு மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு சேதுராமன் மகன் பாதாளம் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாஸ்கர் படுகொலையை கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் ஆழ்வார்திருநகரியில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி மள்ளர் கழகத்தினர் தென்திருப்பேரை பஸ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
இதனிடையே ஆழ்வார்திருநகரியில் இருந்து காடுவெட்டி வழியாக ஆயத்தூர் செல்லும் சாலையில் நேற்றிரவு மர்மநபர்கள் முட்செடிகளை வைத்து சாலையை மறைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று முட்செடிகளை அகற்றினர். இதன் காரணமாக நேற்றிரவு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வல்லநாடு செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரங்கள் ஏற்படாதவாறு தடுக்க வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக