ஞாயிறு, 1 மார்ச், 2015

கொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல்...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28). புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்த இவர், கடந்த 22–ந்தேதி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ் (22), பாதாளம் (23), இசக்கிஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஸ்கர் கொலையால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை போடப்பட்டது. கட்சி தலைவர்கள் யாரும் ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஸ்கரின் பெற்றோருக்கு ஆறுதல்கூறுவதற்காக ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல அனுமதி கேட்டு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், இன்று 1–ந்தேதி பகல் 11 மணி முதல் 1–30 மணிக்குள் 15 பேருடன் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார்தோப்பு கிராமத்திற்கு செல்ல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று பகல் 11 மணிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் பிச்சனார்தோப்பில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு கட்சி நிர்வாகிகள் சிலருடன் சென்றார். பின்னர் பாஸ்கரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து வெளியே வந்த கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறும்போது, மணல் கொள்ளையர்களால் இந்த கொலை நடந்துள்ளது. எனவே இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டாக்டர் கிருஷ்ணசாமி வருகையையொட்டி ஸ்ரீவைகுண்டம், பிச்சனார்தோப்பு, பத்மநாபமங்களம், தோழப்பன்பண்ணை, மணக்கரை, கொங்கராயகுறிச்சி, புளியங்குளம் உள்பட பல்வேறு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. மேலும் பகல் 11 மணி முதல் நெல்லை– திருச்செந்தூர் வழித்தடத்தில் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக