ஞாயிறு, 22 மார்ச், 2015

கிராமப்புற மாணவர்கள் தொழில்படிப்புகளை படிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுரை...

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமீனாட்சிபுரம் மற்றும் செவல்குளம் ஆகிய கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் வசந்தா தலைமை தாங்கினார். யூனியன் கூடுதல் ஆணையாளர் உலகநாதன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வும், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு அங்கன்வாடி மையக்கட்டிடத்தை திறந்து வைத்து பொது மக்களிடம் குறைகளை கேட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:–
மேலமீனாட்சிபுரத்தில் ஒரே ஒரு தெருமட்டும் உள்ளது. இந்த தெருவில் பொது மக்கள் கேட்டுகொண்டதன் பேரில் விரைவில் சிமெண்ட் சாலை போடப்படும். பொது மக்கள் நீங்களே உங்களை சுற்றி உள்ள இடத்தை சுத்தமாக வைத்தால்தான் நோய்கள் வராமல் தடுக்கலாம். கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பட்டபடிப்பை வேலைக்காக படிக்காமல் விபரமாக படிக்கவேண்டும். தொழில் சார்ந்த படிப்பை படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக வெள்ளப்பட்டி, அனந்தமாடன்பச்சேரி, கொல்லங்கிணறு ஆகிய கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி செயலாளர் லட்சுமணபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் கருப்பசாமி, கண்ணன், மாவட்ட செயலாளர்கள் ராமராஜன், கதிரேசன், புதிய தமிழகம் பாராளுமன்ற பொறுப்பாளர் பட்டவராயன், மாநில செய்தி தொடர்பாளர் பாபு, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன், குலசேகரநல்லூர் ஊராட்சி செயலாளர் முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக