சனி, 11 ஏப்ரல், 2015

தென்மாவட்ட கொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ல் புதிய தமிழகம் பேரணி

: ‘தென்மாவட்டத்தில் கொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும்‘ என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நாவலடியூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகராஜா(42) என்ற விவசாயி கடந்த 2ம் தேதி காவல் நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை சக்கிமங்களத்தை சேர்ந்த கதிரேசக்குமார்(36) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகமெங்கும் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், கவுரவக் கொலைகளும் மிகவும் அதிகரித்து வருகின்றன.
எனவே, தென் தமிழகத்தில் துணை ராணுவத்தை பாதுகாப்பு பணிக்கு நிறுத்த வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், கவுரவக் கொலைகளை தடுத்திடவும் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 6ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும். அண்மைக்காலமாக தமிழ் திரைப்படங்கள் சாதீய தூக்கலோடு வருகின்றன. இதனால், மோதல் உருவெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவிற்கு வளரும் போக்கு ஏற்படுகிறது. மத்திய திரைப்பட தணிக்கை குழு வெறும் சான்றிதழ் நிறுவனமாக மாறிவிட்டது. எனவே, சமூக அக்கறை கொண்ட பல தரப்பினரை உள்ளடக்கிய சமூக அக்கறை தணிக்கை குழு ஒன்று அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக