வியாழன், 7 மே, 2015

அனைத்து கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி: டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு ஜி.கே.வாசன் பாராட்டு...

.சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்தார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. நேற்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். இன்று ஜி.கே. வாசனை அவர் சந்தித்துப் பேசினார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, டாக்டர் கிருஷ்ணசாமி இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஜி.கே.வாசன் கூறியதாவது:- தமிழகத்தின் ஒட்டு மொத்த நலன் காக்க தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார். இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை. தமிழக மக்களின் பிரச்சனையில் அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு தமிழகத்துக்கு நியாயமான தீர்வு பெற ஒன்று சேர உள்ளோம். டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது. சமீப காலமாக தமிழக மக்களுக்கு அண்டை மாநிலம் மற்றும் அருகில் உள்ள நாடால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்' என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, ‘தி.மு.க. தலைவரை நேற்று சந்தித்தேன். அதே போல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை இன்று சந்தித்து உள்ளேன். இந்த சந்திப்பு அரசியல் நோக்கத்திற்கான சந்திப்பு அல்ல. தேசிய அக்கறை மற்றும் தமிழகத்தின் நலனுக்காக நடந்த சந்திப்பு. தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். தமிழகத்தின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக