செவ்வாய், 9 ஜூன், 2015

பெரியார் - அம்பேத்கர் பெயரில் 100 வாசகர் வட்டங்கள் தொடக்கம்: டாக்டர் கே.கிருஷ்ணசாமி தகவல்..

தமிழகம் முழுவதும் ஓர் ஆண்டில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டங்கள் தொடங்கப்படும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடியில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. மாணவர்கள் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டங்கள் அமைக்கும்போது, அந்த இரு தலைவர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதுபோன்ற வாசகர் வட்டங்களை அரசியல் ஆக்காமல் சமூக கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர் மத்தியில் ஜாதி வேறுபாடுகள் மேலோங்கியுள்ளன. இந்த வேறுபாடுகளைக் களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகர் வட்டங்கள் அமைய வேண்டும். கல்லூரிகள் மட்டுமின்றி சமுதாய தளத்திலும் வாசகர் வட்டங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்காக ஓர் ஆண்டில் மாநிலம் முழுவதும் 100 அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டங்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த வாசகர் வட்டங்கள் மூலம் மக்கள் மனம்விட்டு பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தூத்துக்குடி, நெல்லை, தருமபுரி மாவட்டங்களில் ஆதி திராவிடர்களுக்கு எதிரான வன்முறை, கொலைகள் அதிகளவில் நடைபெறுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க புதிய தமிழகம் முயன்று வருகிறது. ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த கோயில் பூஜாரி தற்கொலை வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக