செவ்வாய், 16 ஜூன், 2015

லலித் மோடி விவகாரம்: சுஷ்மா பதவி விலக டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!


கோவை: இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக தப்பிய லலித் மோடிக்கு உதவி செய்ததற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்  என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

கோவையில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தின் அண்டை மாநிலங்களால் ஏற்படும் பிரச்னைகள், மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என தமிழகத்தை சுற்றி பலமுனைகளில் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. 

இதுபோன்ற சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுக்கவே அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன். கூட்டணிக்காகதான் அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பதாக வெளிவரும் தகவல்கள் தவறானது. 

ஆவினில் முழுமையாக பால் கொள்முதல் செய்யாமல் இருப்பதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படு கிறார்கள். ஒரு வார காலத்தில் ஆவின் நிறுவனம் மூலம் முழுமையாக பாலை கொள்முதல் செய்யாவிட் டால் ஆவின் நிறுவனத்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். 

ஐ.பி.எல் விவகாரத்தில் இந்திய அரசை ஏமாற்றி சட்டவிரோதமாக தப்பிய லலித் மோடிக்கு , மத்திய அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ் உதவியது கண்டிக்கத்தக்கது. இதற்கு பொறுப்பேற்று சுஷ்மா  உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மோடி சுஷ்மாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். 

யோகாசனம் என்பது இந்திய மக்களுக்கான கலை என்பதை விட்டு, அதற்கு மதச்சாயம் பூசப்படுகிறது.இதனால் அந்த கலை பாரம்பரிய மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் இழந்து விடும். எனவே பாரதிய ஜனதாவும், அதன் துணை அமைப்புகளும் யோகாசனத்தை குறிப்பிட்ட மதத்திற்குட்பட்டது என பிரதிநிதித்துவம் காட்ட முயற்சிக்கக்கூடாது. 

மேகதாது அணை பிரச்னை, முல்லை பெரியாறு அணை பிரச்னை, பாலாறு பிரச்னை, மீனவர் பிரச்னை என அனைத்து பிரச்னைகளிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும். இதற்காக வாய்ப்பு கிடைத்தால் தமிழக முதல்வரையும் சந்தித்து வலியுறுத்துவேன்” என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக