வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தேவேந்திரகுல வேளாளரும் ‘எஸ்.சி.’ பட்டியலும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம் – பேராசிரியர் பெ. தங்கராஜ், MA. M.phil...(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )


மள்ளர்கள் (தேவேந்திரர்கள்) எஸ்.சி. பட்டியலிலிருந்து விலகுதல்
எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் படிக்க முடியாது, வேலைக்குப் போகமுடியாது என்கிற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மேலும் சில வாதங்கள் வருகின்றன. இதையொட்டி வருகிற வாதங்களைக் கீழ்கண்டபடி தொகுக்கலாம்.
1. எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் படிக்க முடியாது, சலுகை என்ன ஆவது?.
2. எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் வேலைக்குப் போக முடியாது, ஒதுக்கீடு என்ன ஆவது?
3. இது, ஏற்கனவே படித்து வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் வாதம். இனிவரும் தலைமுறை என்ன ஆவது?
4. யாரைக் கேட்டு – எந்த அடிப்படையில் தேவேந்திரரை எஸ்.சி. அட்டவணையில் சேர்த்தார்கள்? எனக் கேட்பவர்கள், யாரைக் கேட்டு – எந்த ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கச் சொல்கிறார்கள்?.
5. எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் மதிப்பு மரியாதை வந்து விடுமா?. எஸ்.சி. பட்டியலை ஏன் இழிவாகக் கருத வேண்டும்.
6. ஏன் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும்.
1.முதல் வாதத்தை எடுத்துக் கொண்டால்
பட்டியலிலிருந்து விலகினால் படிக்க முடியாது என்பது தவறு. எஸ்.சி. பட்டியல் வந்தது 1935 ல் தான். அதற்குமுன் இவர்களில் யாரும் படிக்கவில்லையா?, அரசு, தனியார் பள்ளிகளில் இவர்களில் பலர் படித்தார்கள். கிறித்துவ மிசனரிகள் ஆரபித்த பள்ளிகளில் பலர் படித்தார்கள். மதப் பரப்பல் நோக்கமாக இருந்தாலும், படிக்க வாய்ப்புத் தரப்பட்டது. பல சாதிக்காரர்கள் படிக்காமல் இருந்த காலத்திலேயே இவர்கள் படிப்பில் நாட்டம் காட்டினார்கள்.
அடுத்து, படிப்பு என்பது, ஆர்வம் ஈடுபாடு காரணமாக வரவேண்டும். ஒதிக்கீடு மூலம் வர முடியாது. உதாரணமாக கள்ளர் சமூகத்தைத் திருத்துவதற்காக அரசு கள்ளர் சீரமைப்பு ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்தில், இதற்காக ஒரு தனி துணை மாவட்ட ஆட்சியர் உள்ளார். ஆனால் கள்ளர்கள், சரிவர இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்பள்ளிகளில் இன்று வேறு சமூகக் குழந்தைகளே அதிகம் படிக்கிறார்கள். தேவேந்திரர் கல்வி அளவைவிட சுமார் 15 விழுக்காடு குறைவாயுள்ளது என்று முக்குலத்து சமூகத் தலைவர்களே கூறுகிறார்கள். இத்திட்டம் அறவே தோல்வியடைந்து விட்டது. இத்துறை சார்ந்த பணியாளர்களையோ அல்லது இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரையோ கேட்டால் இது பற்றிய விபரங்களைக் கூறுவார்கள். இதற்குக் காரணம் என்ன?. அரசுத் திட்டங்கள் – சலுகைகள் இருந்தும் அச்சமூகத்தார் படிப்பில் இன்னும் கவனம் செலுத்தவில்லை. திட்டம் உள்ளது, ஆனால் சமூகத்தார் நாட்டம் இல்லை. மேலும் கல்வி மண்டலத்திற்கே வராத பல சாதிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இதே போல் நரிக்குறவர்களைப் படிக்க வைக்க அரசு எத்தனையோ திட்டங்கள் தீட்டிச் செயலில் இறங்கியது. இவர்களுக்காக மதுரை, மேலூர், நத்தம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் விடுதிகளை மூடிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
இன்னொரு முக்கிய செய்தியைக் கவனிக்க வேண்டும். அரசுக் கணக்கு அறிக்கைகளின்படி யாராவது பள்ளியில் சேர விரும்பினால் ‘இடமில்லை’ என்று மறுக்கும் நிலை தமிழ்நாட்டில் உள்ளதா? இல்லையே! இதற்கு மாறாக இடை நிறுத்தம் (Drop out) இருப்பதைப் பற்றித்தான் குறிப்பு உள்ளது. 10, 12,ம் வகுப்பிலும், அதற்கடுத்து கல்லூரியில் சேரும் போதும் இது போன்ற இடை நிறுத்தம் அதிக அளவில் உள்ளதாகவும், இது 10 முதல் 15 விழுக்காடு வரை உள்ளதாகவும் குறிப்புகள் காட்டுகின்றன. இது நாம் அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த காலங்களில் இதை நன்கு அறிவோம். எப்படியெனில், பல கல்லூரிகளில் சேர்க்கை முடிந்து விட்டது, இடமில்லை என்று கூறுவார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும், தமிழக கல்லூரிக் கல்வியில் 7, 8, 9 விழுக்காடு இடங்கள் காலியாகவே இருந்தன. இப்பொழுதும் அப்படிதான். இந்த புள்ளி விபரங்களை வெளிப்படுத்தினால் சேர்க்கை சமயம் நன்குடை பெற முடியாது. பணம் பறிக்க முடியாது எனக் கருதி வெளியிடுவது கிடையாது. அப்படியிருக்கும் போது படிக்க முடியாது என்று எப்படி கூறமுடியாது.
அடுத்து, எஸ்.சி. பட்டியலில் இல்லாத இந்து நாடார், கள்ளர், மறவர், வன்னியர், இசுலாமியர், மீனவர், முத்தரையர், கைவினைஞர்(விசுவகர்மா), வண்ணார், அம்பட்டர்(நாவிதர்) ஆகியோர் பழங்காலத்திலும் சரி இப்பொழுதும் சரி, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் தேவேந்திரர் அளவிலிருந்து குறைவாகவே உள்ளார்கள். ஆனால் இவர்கள் எஸ்.சி. அட்டவணையில் சேர்க்கவில்லை. எஸ்.சி பட்டியல் உருவானது கல்வியில் பிற்போக்காக இருந்தவருக்குக் கல்வி தருவதற்காக என்றால் இவர்களையல்லவா முதலில் சேர்த்திருக்க வேண்டும்! இதிலிருந்து தெரியவில்லையா எஸ்.சி பட்டியல் உருவானதின் நோக்கம் அதுவல்லவென்று.
இனி, கல்வி உதவிப் பணத்தைக் கூறுவார்கள், இது எல்லோருக்கும் உள்ளது. 28 முற்பட்ட சாதிகள் தவிர எல்லோருக்கும் சாதிகள் தவிர எல்லோருக்கும் உள்ளது. விடுதிகள் எல்லோருக்கும் உண்டு. பயணச் சலுகை எல்லோருக்கும் உண்டு. கற்கைக் கட்டண விலக்கு சிலருக்கு முழுவதும், சிலருக்கு பாதியும் உண்டு. எனவே இதெல்லாம் அனுபவிப்பது எஸ்.சி அட்டவணைச் சாதியார் மட்டும்தான் என்று கூறுவது சரியல்ல. மாணவர் சலுகைகள் அனைத்துச் சாதிகளுக்கும் உள்ளன.
2. அடுத்து, வேலை வாய்ப்பு பற்றிக் கூறுகிறார்கள்.
எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் வேலைக்குப் போக முடியாது என வாதிடுவது சரியல்ல. 1980 முதல் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் நிலை அல்லது இருந்த நிலை, மற்ற பட்டியல் சாதிகளைவிட எஸ்.சி. பட்டியல் சாதியார் மத்தியில்தான் கூடுதலாக இருந்த்து. இதற்குக் காரணம், மற்றவர்களுக்குத் தனியார் துறை வாய்ப்புகள் உள்ளன. எஸ்.சி. அட்டவணை சாதியாருக்கு அது அறவே அல்ல.
அரசு வேலை என்ற சில எழும்புத் துண்டுகளைக் காட்டி இவர்கள் அரிசன், தாழ்த்தப்பட்டவன், தலித் என்று ஒதுக்கி வைக்கவும் அழுத்தி வைக்கவும் தான் இப்படியல் பயன்படுகிறது. தனியார்துறை வேலை வாய்ப்பையும், அரசுத்துறை வேலை வாய்ப்பையும் ஆய்வு செய்தால் இந்த உண்மையைக் கண்டுபிடிக்கலாம். சரி, அரசுப் பணி வராமல் இருந்த காலத்தில் இவர்கள் எல்லாம் செத்து விட்டார்களா? எத்தனை பேர் அரசுப் பணிக்கு வருகிறார்கள்? ஊருக்கு 4, 5 பேர் வருகிறார்கள். இவர்களை வைத்தா சமூக முன்னேற்ற எழுச்சியைக் கணக்கிடுவது?. சரி அரசு பணியைக் கணக்கில் எடுத்தால்கூட தேவேந்திரர் இன்று ஏராளமானோர் அரசுப் பணிக்கு வந்துவிட்டார்கள். இந்து நாடார், கள்ளர், மறவர், வன்னியர், இசுலாமியர், மீனவர், முத்தரையர், கைவினைஞர்(விசுவகர்மா), வண்ணார், அம்பட்டர் ( நாவிதர் ) இவர்களைவிட எண்ணிக்கையிலும், விழுக்காட்டுக் கணக்கிலும் அதிகம் வந்துவிட்டார்கள். ஆனால் இதுவே மற்றவரின் காழ்ப்புணர்வுக்குக் காரணமாயுள்ளது. எஸ்.சி. அட்டவணையில் இருந்து கொண்டு இவ்வளவுபேர் வந்து விட்டார்களே! என்று வயிற்றெரிச்சல் படுகிறார்கள். இக்காழ்ப்புணர்வில் எல்லோருமே இவருக்கு எதிராகக் களத்தில் இறங்குகிறார்கள். எஸ்.சி. பட்டியலில் இல்லாவிட்டால் இந்த அளவுக்குக் காழ்ப்புணர்வு ஏற்படாது.
( தொடரும் ) .(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக