திங்கள், 21 செப்டம்பர், 2015

தேவேந்திரகுல மக்களின் புண்ணிய பூமியில் பல்வேறு அரசியல் கட்சியினர் வீர வணக்கம் .

தேவேந்திரகுல மக்களின் புண்ணிய பூமியில் பல்வேறு அரசியல் கட்சியினர் வீர வணக்கம் ...பரமக்குடி, பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் சார்பில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, டாக்டர் சுந்தர்ராஜ் மற்றும் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரின் 58-வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நினைவிடம் முழுவதும் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை அவரின் சொந்த ஊரான செல்லூரை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல, இமானுவேல் சேகரனின் குடும்பத்தினர் நினைவிடத்திற்கு வந்திருந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளின் சார்பில் அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன்படி முதன்முதலாக அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, டாக்டர் சுந்தர்ராஜ், அன்வர்ராஜா, எம்.பி. ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரளாக சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட செயலாளர் தர்மர், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பரமக்குடிமுனியசாமி, ராமநாதபுரம் ஜி.முனியசாமி, திருவாடானை ஆணிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலுச்சாமி,போகலூர் யூனியன் தலைவர் நாகநாதன், பரமக்குடி நகரசபை தலைவர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, தி.மு.க. சார்பில் மாநில துணை செயலாளர் துரைச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, தமிழரசி, மாவட்ட செயலாளர் திவாகர், முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் இளங்கோவனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், த.மா.கா சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகவேல்ராஜன், ராம்பிரபு, ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரராமவன்னி, ரெங்கநாதன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் வைகோ கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாhர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் ஜான்பாண்டியன், பா.ம.க. சார்பில் மாநில பொது செயலாளர் வடிவேல்ராவணன், தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர். டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D .M .L .A ., தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுதவிர அந்தந்த பகுதிகளில் இமானுவேல் சேகரன் திருஉருவப்படத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு பொங்கல் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார்சோமானி ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதபுரம் மயில்வாகனன் உள்ளிட்ட 9 போலீஸ் சூப்பிரண்டுகளும், 7 உதவி போலீஸ் சூப்பிரண்டுகளும், 20 துணை போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டனர். ஆளில்லா விமானம் மற்றம் 360 டிகிரி கோணத்தில் நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் சக்திவாய்ந்த கேமரா பொருத்தப்பட்ட வானில் பறக்கும் பலூன் போன்றவற்றின் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் மாவட்டம் கொண்டுவரப்பட்டு அமைதியாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக