புதன், 12 அக்டோபர், 2016

சட்டப்பேரவையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு வெளிநடப்பு!


திருச்செங்கோடு காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய செல்வி விஷ்ணு பிரியா அவர்களுடைய மரணம் குறித்து பேச இரண்டுமுறை அனுமதி கேட்டும் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததையடுத்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்தார். அப்போது சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
"திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய செல்வி விஷ்ணு பிரியா அவர்களுடைய மரணம் குறித்து இன்று சட்டசபையிலே கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டுமென்று இன்று காலை அவை கூடிய உடனேயே பிரச்சினையை எழுப்பினோம். அதற்கு பேரவைத் தலைவருடைய அனுமதி கிடைக்கவில்லை. கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்திலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி கேட்டிருந்தேன். அதற்கும் பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. எனவே பேரவைத் தலைவருடைய இந்த சர்வாதிகார போக்கைக் கண்டிக்கக்கூடிய வகையிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையைக் கண்டிக்கக்கூடிய வகையிலும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வெளிநடப்பு செய்திருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் ஓமலூரைச் சார்ந்த கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு விஷ்ணுபிரியா தலைமை வகித்திருந்தார். ஆனால் எங்களுக்குக் கிடைத்த செய்தியெல்லாம் அவர் எப்பொழுதெல்லாம் குற்றவாளிகளை மிக அருகில் நெருங்கினாரோ அப்பொழுதெல்லாம் அவர் உயர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுள்ளார். அவர் ஒருமுறை கர்நாடக மாநிலம் சிற்றூர் அருகே குற்றவாளியை கைது செய்யக்கூடிய தருவாயில் இருக்கின்றபொழுது கூட, அந்த மாவட்ட காவல்துறைக்கு தலைமையேற்றிருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி, உடனடியாக நீ பின்வாங்கி வா என்று அழைத்தது, அதேபோல பலமுறை அந்த யுவராஜ் என்ற குற்றவாளியை நெருங்கிய பொழுதெல்லாம் உயர் அதிகாரிகள் அந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை தன்னுடைய கடமையைக் கூட ஆற்றுவதிலிருந்து தடுத்து நிறுத்தியதன் விளைவாக, காவல்துறையில் தான் எடுத்திருக்கக்கூடிய பணியை நிறைவேற்ற முடியவில்லை என்ற மன வருத்தத்திற்கு ஆளாகி அல்லது ஆளாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு அவருடைய மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது தற்கொலை என்று குறிப்பிடப்பட்டாலும் இதனை தற்கொலையாகக் கருத முடியாது. இது கொலையா?அல்லது தற்கொலையா? என்று விசாரிக்க வேண்டுமென்று சொன்னால் மத்திய புலனாய்வுக் குழு தான் விசாரிக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் இதில் உண்மை வெளிவராது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவே கடந்த நான்கு மாத காலமாக செயல்படாமல் செயலிழந்து கிடக்கின்ற பொழுது, இன்னொரு குழு மீண்டும் இருவருடைய மரணத்திற்குண்டான உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கூண்டில் நிறுத்தும் என்ற நம்பிக்கை சிறிதும் கிடையாது. தமிழ்நாடு காவல்துறை முற்றாக செயலிழந்து நிற்கிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு அங்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. எனவே இதற்கு ஒரு தீர்வு வேண்டுமென்று சொன்னால் இதுகுறித்து நல்லமுறையில் சட்டமன்றத்திலே சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகளைச் சார்ந்த நாங்கள் விடுத்த கோரிக்கையை அவைத்தலைவர் உதாசீனப்படுத்தினார், மறுத்தார். எனவே அவரைக் கண்டித்து நாங்கள் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறோம். மேலும் விஷ்ணுபிரியாவினுடைய தற்கொலைக் கடிதத்தின் 15 பக்கங்களில் 9 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இது மிகப்பெரிய மோசடியும் அந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்குண்டான நடவடிக்கையுமாகும். ஒருபக்கம் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் சாவுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. மொத்தத்தில் இங்கு எலும்புக்கூடுகள் மீதும் பிணங்களின் மீதும் தான் ஆட்சி நடத்துகிறார்கள் என்று நான் குற்றம் சுமத்துகிறேன்" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக