புதன், 28 டிசம்பர், 2016

தலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்.... புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள்

தலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்.... புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள் ..தமிழகத்தின் நிர்வாக நலன் கருதி, தலைமைச் செயலக கிளையை மதுரைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை தென்னகத்தில் வலுவடைந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருப்பதுபோல மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
புதிய வருவாய் கோட்டங்கள்
மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி என்பது மட்டும் ஜனநாயகம் அல்ல. அந்த ஆட்சி மக்கள் எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டுதான், புதிய மாவட்டங்களும், தாலுகாக்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்தில் புதிதாக 9 வருவாய் கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும், 59 குறுவட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் சூழலில், தலைமைச் செயலகம் மட்டும் தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி நிற்கிறது. அதுவும் தென்னக மக்களுக்கு பாரமாக, தமிழகத்தில் வடக்கு ஓரமாக ஒதுங்கி நிற்கிறது.
தென்னகத்தின் அவஸ்தை
சென்னையில் தலைநகர் இருப்பதன் அவஸ்தையை தென்னகத்தில் பிறந்தவர்களால்தான் உணர முடியும். சென்னையில் புறப்படும் மின்சார ரயில் தென்னகத்தை அடைய வேண்டுமானால், இடையில் நிறுத்தி டீசல் எஞ்சின் மாற்ற வேண்டிய சூழல் தொடர்கிறது. தென்னக மக்கள் சென்னை போக வேண்டுமானால் 3 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டிய அவலமும் நீடிக்கிறது. சுமார் 700 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள கன்னியாகுமரி மக்கள், தலைமைச் செயலக அதிகாரி ஒருவரை சந்திக்க வேண்டும் என்றால் குறைந்தது 2 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டிய கட்டாயமும் தொடர்கிறது.
கிராம மக்களைப் பொருத்தவரையில் ஆட்சியர் அலுவலகங்கள் தான் தலைமைச் செயலகங்கள் என்றாலும் அதிகாரம் எல்லாம் சென்னையில்தான் குவிந்திருக்கிறது. தகுதியிருந்தும் உரிமை மறுக்கப்படும்போது, மேல்முறை யீட்டிற்காக மக்கள் சென்னை செல்கிறார்கள். பணி நியமனம், இடமாற்றம், நில ஒதுக்கீடு போன்றவற்றிற்கு சென்னை சென்றே ஆக வேண்டும். இவ்வளவு ஏன்? உள்ளூர் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால்கூட, சென்னையில் இருந்து உத்தரவு வர வேண்டியது இருக்கிறது.
வேலை, தொழில் வாய்ப்பு இல்லை
தென்னகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. அதில் படித்து வெளியேறுபவர்கள் எல்லாம் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள். தென்தமிழகம் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருப்பதற்கு காரணம் இங்கே யாரும் தொழில் தொடங்க முன்வராததுதான். கட்டமைப்பு வசதி இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும், தொழில்பேட்டைகளும் காத்தாடுகின்றன.
இதை கருத்தில் கொண்டுதான் "தென்தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்பட வேண்டும் என்றால், அதிகார மையம் பக்கத்தில் இருக்க வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆண்டுக்கு ஒருமுறையேனும் மதுரையில் கூட்ட வேண்டும்" என்று சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தி யுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்கு நகர், குளிர்காலத்துக்கு ஜம்மு என்று இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன. சென்னை மாகாணமாக இருந்தபோது, அதன் கோடைக்கால தலைநகராக சென்னையும், குளிர்கால தலைநகராக ஊட்டியும் இருந்தது. ஆட்சி யாளர்களின் சொகுசுக்காக அரசு ஆவணங்கள் மலையேறிச் செல்லும்போது, மக்களின் வசதிக்காக அவை மதுரைக்கு வந்தால் என்ன? என்பது தென்னக மக்களின் கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக